ஜம்மு-காஷ்மீரில் நள்ளிரவில் அமலானது குடியரசுத் தலைவர் ஆட்சி

  0
  3
  President Ramnath Govind

  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நள்ளிரவு முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது

  ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நள்ளிரவு முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.

  ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயக கட்சி – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. மொத்தம் 87 தொகுதிகளை கொண்ட அம்மாநில சட்டப்பேரவையில், மக்கள் ஜனநாயக கட்சிக்கு 28 எம்எல்ஏ-க்களும், பாஜக-விற்கு 25 எம்எல்ஏ-க்களும் இருக்கின்றனர்.

  மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்ற மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) நிறுவனர் முஃப்தி முகமது சயீது, சில மாதங்களில் காலமானதால், அவரது மகள் முஃப்திமெஹபூபாவின் தலைமையில் கூட்டணி ஆட்சி தொடர்ந்தது. இதனிடையே பாஜகவு-க்கும், பிடிபி-க்கும் இடையே பல விஷயங்களில் கருத்து மோதல் நீடித்து வந்ததையடுத்து, மக்கள் ஜனநாயகக் கட்சியுடனான கூட்டணியை முறித்து கொள்வதாக பாஜக அறிவித்தது.

  இதையடுத்து, அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ஒப்புதலின் பேரில் அம்மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

  கடந்த 6 மாதங்களாக அமலில் இருந்த ஆளுநர் ஆட்சி நேற்றுடன் முடிவடைந்த நிலையில், நள்ளிரவு முதல் ஜம்மு-காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆளுநர் ஆட்சி நிறைவடைவதை யொட்டி, மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் ஏற்கெனவே பரிந்துரை செய்திருந்தார். இந்த பரிந்துரையை மத்திய அமைச்சரவைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்தது. இதற்கு கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

  இதனைத் தொடர்ந்து, மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த புதன்கிழமை ஒப்புதல் அளித்தார். மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து நிர்வாகப் பணிகளும் குடியரசுத் தலைவரின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தையும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட ஆளுநர் இனி மேற்கொள்வார் என குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.