சைரஸ் மிஸ்திரியை மீண்டும் செயல் தலைவராக நியமிக்க தீர்ப்பாயம் உத்தரவு! இடியாப்ப சிக்கலில் டாடா சன்ஸ்

  0
  2
  சைரஸ் மிஸ்திரி

  சைரஸ் மிஸ்திரியை டாடா சன்ஸின் செயல் தலைவராக மீண்டும் 4 வாரத்துக்குள் நியமிக்க வேண்டும் என தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் டாடா நிறுவனத்துக்கு சிக்கல் எழுந்துள்ளது.

  2004ம் ஆண்டில் சைரஸ் மிஸ்திரி டாடா சன்ஸ் குழுமத்தில் சேர்ந்தார். 2012ம் ஆண்டில் டாடா சன்ஸ் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடாவுக்கும், சைரஸ் மிஸ்திரிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட தொடங்கியது. இதனையடுத்து  2016 அக்டோபரில் சைரஸ் மிஸ்திரி  செயல் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். மேலும் அந்த பதவிக்கு தற்போது செயல் தலைவராக உள்ள என். சந்திரசேகரன் நியமனம் செய்யப்பட்டார்.

  ரத்தன் டாடா

  பதவி நீக்கத்துக்கு எதிராக சைரஸ் மிஸ்திரி தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் தேசிய நிறுவன சட்ட தீா்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த வந்த தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் நேற்று பரபரப்பான தீர்ப்பை வழங்கியது.

  டாடா சன்ஸ்

  தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தனது தீர்ப்பில், சைரஸ் மிஸ்திரியை நீக்குவதற்கான நடைமுறைகள் முறையாக கடைப்பிடிக்கவில்லை. அதனால் சைரஸ் மிஸ்திரியை மீண்டும் டாடா சன்ஸ் செயல் தலைவராக 4 வார காலத்துக்குள் நியமனம் செய்ய வேண்டும். என். சந்திரசேகரன் நியமனம் சட்ட விரோதமானது மற்றும் செல்லாது என உத்தரவு பிறப்பித்தது. மேலும், 4 வாரத்துக்குள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய டாடா சன்ஸ்க்கு 4 வாரம் கால அவகாசம் வழங்கியுள்ளது.  தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் எதிர்த்து டாடா சன்ஸ் மேல்முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், தீர்ப்பாயத்தின் உத்தரவால் டாடா நிர்வாகம் மீதான நம்பகத்தன்மையில் சிறிது சந்தேகம் எழுந்துள்ளது போல் தெரிகிறது.