சேலம் வாழப்பாடியில் முதல்வர் பழனிசாமி கிரிக்கெட் மைதானம் திறந்து வைத்தார் – ராகுல் டிராவிட் பங்கேற்பு

  0
  3
  palanisamy

  வாழப்பாடியில் ரூ.8 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட கிரிக்கெட் மைதானத்தை முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

  சேலம்: வாழப்பாடியில் ரூ.8 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட கிரிக்கெட் மைதானத்தை முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

  சேலம் மாவட்டம் வாழப்பாடியில் சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் சார்பில் ரூ.8 கோடி செலவில் புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானம் சுமார் 13 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்து காணப்படுகிறது. சேலம் வாழப்பாடியை அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டியில் சென்னை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மலையடிவார சூழலில் இந்த கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ளது. இரண்டு ஆண்டுகள் அயராத உழைப்பில் உருவாகியுள்ள இந்த மைதானம் 13 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மேலும் இந்த மைதானத்தில் ஐந்து பிட்ச்சுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கிரிக்கெட் மைதானத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது.

  ttn

  இந்த நிலையில், இன்று காலை 9 மணிக்கு முதல்வர் பழனிசாமி புதிய கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார். இந்த விழாவில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா கோபிநாத் மற்றும் பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செல்லூர் ராஜு, செங்கோட்டையன், தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  ttn

  விழாவில் ராகுல் டிராவிட் பேசுகையில், “அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் சிறிய நகரங்கள், கிராமங்களில் இருந்து தான் வரவிருக்கின்றனர். சேலத்தில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த கிரிக்கெட் மைதானத்தில் என்னால் விளையாட முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது. சேலத்தை சேர்ந்த பந்து வீச்சாளர் நடராஜன் இளம் வீரர்களுக்கு ஊக்கமளிப்பவராக உள்ளார்” என்றார்.

  ttn

  நிகழ்ச்சியில் பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன் பேசுகையில், “சேலத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும். அதில் தோனி விளையாடுவார்” என்று கூறினார். மேலும் இந்த புதிய மைதானத்தை சுற்றிலும் விரைவில் பார்வையாளர்கள் கேலரி அமைக்கப்பட உள்ளது.  இதுதவிர அனைத்து நவீன வசதிகளையும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இங்கு டிஎன்பிஎல், ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.