சென்னையில் போகி புகையால் காற்று மாசு அதிகரிப்பு

  0
  1
  bhogi

  போகி பண்டிகையையொட்டி சென்னை நகரில் காற்று மாசு அதிகரித்துள்ளது. புகை மற்றும் பனிமூட்டத்தால் வாகனஓட்டிகள் தவித்து வருகின்றனர்

  சென்னை: போகி பண்டிகையையொட்டி சென்னை நகரில் காற்று மாசு அதிகரித்துள்ளது. புகை மற்றும் பனிமூட்டத்தால் வாகனஓட்டிகள் தவித்து வருகின்றனர்.

  பொங்கல் திருநாள் உலகமெங்கும் வாழும் தமிழர்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. விவசாயிகள், இயற்கையின் அருளினாலும், தங்கள் கடின உழைப்பாலும் விளைந்த நெற்கதிர், கரும்பு, வாழை, இஞ்சி, மஞ்சள் ஆகிய பொருட்களை இறைவனுக்குப் படைத்து வழிபட்டு, தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கின்றார்கள்.

  நடப்பாண்டின் பொங்கல் பண்டிகை தை மாதம் ஒன்றாம் தேதியான நாளை கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தின் இறுதி நாளான இன்று போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் இப்பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில், பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை எரித்து மக்கள் போகியை கொண்டாடுவது வழக்கம்.

  அந்த வகையில், இந்த ஆண்டின் போகிப் பண்டிகை இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் அதிகாலையில் பழைய பொருட்களை சேகரித்து தங்கள் வீடுகளின் முன்பு எரித்தனர். சிலர் நேற்று இரவு முதலே பழைய பொருட்களை எரிக்க தொடங்கி விட்டனர்.

  இந்நிலையில், சென்னை நகரில் போகி புகையால் காற்று மாசு வழக்கத்தை விட அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிகாலையில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அத்துடன் போகி புகையும் இணைந்ததால், வாகனஓட்டிகள் தவிப்புக்கு ஆளாகினர்.

  அதேசமயம், காற்றை மாசுபடுத்தும் வகையில் போகியை கொண்டாடக் கூடாது என்பதில் பொதுமக்களும் கவனமாக இருந்து வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் சம்பிரதாயத்திற்காக, ஒருசில பொருட்கள் மற்றும் தேவையற்ற மட்கும் குப்பைகளை மட்டுமே எரித்து போகியை பொதுமக்கள் கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.