செஞ்ச வேலைக்கு காசு கேட்டா.. சிங்கத்தை விட்டு கடிக்க விடுறாங்க!! பாகிஸ்தானில் முதலாளியின் கொடூரம்

  0
  2
  அலி ராசா

  எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து முகமது ரஃபி என்பவரை அழைத்து பார்க்கச் சொல்லியிருக்கிறார்

  பாகிஸ்தானில் செய்த வேலைக்கு கூலி கேட்டதற்காக, தொழிலாளி மீது செல்லப் பிராணியான சிங்கத்தை ஏவி விட்டு கடிக்க செய்த முதலாளியின் மீது போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் லாகூர் அருகே உள்ள முக்கிய பகுதியில் வசித்து வருபவர் அலி ராசா. இவர் அதே பகுதியில் திருமணங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் மத கூட்டங்கள் ஆகியன நடத்துவதற்காக மண்டபம் ஒன்றை வைத்துள்ளார். 

  இதில் சில மாதங்களுக்கு முன்பு திடீரென மின்சார வினியோகத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்வதற்காக அதே பகுதியில் எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து முகமது ரஃபி என்பவரை அழைத்து பார்க்கச் சொல்லியிருக்கிறார். இரண்டு நாட்கள் முழுவதுமாக பணியில் ஈடுபட்டு மின்சார வினியோக கோளாறை சரி செய்து கொடுத்துள்ளார் முகமது ரஃபி. 

  பிறகு, மண்டபத்தில் வேலை பார்த்ததற்காக அலி ராசாவிடம் முகமது ரஃபி கூலி கேட்டிருக்கிறார். அதற்கு இப்போது தருகிறேன்; பிறகு தருகிறேன்; என அலி ராசா தொடர்ந்து அலைக்கழித்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முகமது ரஃபி நேரடியாக அலி ராசாவின் வீட்டிற்கே சென்று வேலை பார்த்ததற்கான கூலியை தருமாறு கேட்டுள்ளார். 

  அப்போதும் தரமறுத்த அலி ராசா, இங்கிருந்து உடனடியாக கிளம்புமாறு வற்புறுத்தி இருக்கிறார். மேலும் ஆத்திரமடைந்த முகமது ரஃபி, அலி ராசாவின் வீட்டிற்குள்ளேயே செல்ல முற்பட்டுள்ளார். இதைக் கண்ட அலி ராசா, முகமது ரஃபியை விரட்டியடிக்க தனது செல்லப் பிராணியான சிங்கத்தை அவர் மீது ஏவி விட்டிருக்கிறார். ரஃபியின் முகம் மற்றும் கைகளை சிங்கம் கடித்து பிராண்டியதால், அவர் அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடி வந்து சிங்கத்திடம் இருந்து முகமது ரஃபியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

  மேலும் அலி ராசா மீது முகமது ரஃபியை கொலை செய்ய முயற்சி செய்ததாக அருகிலிருந்த காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர். அதேபோல, அவர் வளர்க்கும் சிங்கத்தினால் அக்கம்பக்கத்தினர் உயிருக்கும் எந்நேரமும் ஆபத்து நேரிடக் கூடும் எனவும் புகார் அளித்தனர்.