சூது, சூழ்ச்சி, கள்ளம் இல்லாதவர் வைகோ: சந்திப்புக்குப் பின் திருமாவளவன் பேட்டி

  0
  1
  vaiko

  வைகோ கள்ளம் கபடமற்ற, வெளிப்படையாகப் பேசக்கூடிய நல்ல மனிதர் என திருமாவளவன் புகழாரம் தெரிவித்துள்ளார்.

  சென்னை: வைகோ கள்ளம் கபடமற்ற, வெளிப்படையாகப் பேசக்கூடிய நல்ல மனிதர் என திருமாவளவன் புகழாரம் தெரிவித்துள்ளார்.

  விசிக தலைவர் திருமாவளவனுக்கும் மதிமுக பொது செயலாளர் வைகோவுக்கும் இடையே கடந்த சில தினங்களாக கருத்து மோதல்கள் நீடித்து வந்தது. இதனால், திமுக கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் வெளிப்படையாகவே பேசத் தொடங்கினர்.

  இது போன்ற யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, வைகோ இல்லத்தில் அவரை சந்தித்து விசிக தலைவர் திருமாவளவன் ஆலோசனை நடத்தினார்.

  இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “வைகோவிடம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நட்போடு இருக்கிறேன். அவர் நல்ல மனிதர். சூது, சூழ்ச்சி, கள்ளம் இல்லாதவர். நினைத்ததை ஒளிவு மறைவின்றி பேசக்கூடியவர். 

  திமுக கூட்டணி அமைவதற்கு முன்பே, உடைந்துவிடும் என சிலர் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள், எந்த சக்தியும் எங்கள் அணியை சிதறடிக்க முடியாது. என்னாலும், வைகோவாலும் அணிக்கு எந்த பாதிப்பும் வராது” என தெரிவித்துள்ளார்.

  மேலும், நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.