சுமார் 300 கோடி டவுன்லோடுகளை கடந்து சாதனை படைத்த வி.எல்.சி மீடியா பிளேயர் ஆப்

  0
  1
  VLC

  பிரபல வீடியோ பிளேயர் மென்பொருளான வி.எல்.சி மீடியா பிளேயர் சுமார் 300 கோடி டவுன்லோடுகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

  மும்பை: பிரபல வீடியோ பிளேயர் மென்பொருளான வி.எல்.சி மீடியா பிளேயர் சுமார் 300 கோடி டவுன்லோடுகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

  தற்போதைய நவீன காலத்தில் கணினியோ, ஸ்மார்ட்போனோ அனைவரும் வீடியோ பார்ப்பதில் அல்லது இசையை கேட்பதில் நிறைய நேரங்களை செலவிட்டு வருகிறோம். அவற்றை ரசித்து பயன்படுத்துவதற்கு மீடியா பிளேயர் மென்பொருட்களே உதவுகின்றன. ஆப் சந்தையில் ஏராளமான மென்பொருட்கள் அதற்கென்றே உள்ளன. இருப்பினும் பெரும்பாலானோர் பயன்படுத்துவது வி.எல்.சி மீடியா பிளேயர் தான். ஸ்மார்ட் டிவிக்களில் கூட படம் பார்ப்பது, இசையை கேட்பதற்கு இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக திகழ்கிறது.

  வீடியோலேன் எனும் நிறுவனம் வி.எல்.சி பிளேயர் சேவையை வழங்கி வருகிறது. சி.இ.எஸ் 2019 தொடக்க நிகழ்வுக்கு முன்னர் வி.எல்.சி. பிளேயர் 300 கோடி டவுன்லோடுகளை கடக்க சில லட்சங்கள் பின்தங்கியிருந்தது. இதையடுத்து சி.இ.எஸ். 2019 விழாவில் வீடியோலேன் நிறுவனம் சார்பில் பிரத்யேக அரங்கு அமைக்கப்பட்டது. இந்த அரங்கில் ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்ற சாதனங்களை வரிசைப்படுத்தி, அவற்றை ஒன்றிணைத்து வெவ்வேறு தளங்களில் இருந்து வி.எல்.சி. டவுன்லோடுகள் எண்ணிக்கை துல்லியமாக கண்காணிக்கப்பட்டது.

  இந்நிலையில், கடந்த ஜனவரி 10-ஆம் தேதி அனைத்து விதமான சாதனங்களின் டவுன்லோடுகளை பொறுத்தவரை மொத்தமாக 300 கோடி டவுன்லோடுகளை கடந்து சாதனை படைத்தது. இந்த சாதனை தொடர்பாக வி.எல்.சி டெவலப்பரான லுடோவிக் ஃபாவெட் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்தார். அதற்கு பயனர்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.