சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதம் 1.40 சதவீதம் வரை குறைப்பு…..

  0
  1
  சிறுசேமிப்புகளுக்கான வட்டி குறைப்பு

  இந்த நிதியாண்டின் முதல் காலாண்டுக்கு (ஏப்ரல்-ஜூன்) தேசிய சேமிப்பு பத்திரம், பி.பி.எப். உள்ளிட்ட சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தை 1.40 சதவீதம் வரை மத்திய அரசு குறைத்துள்ளது.

  சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதம் 3 மாதங்களுக்கு அல்லது காலாண்டுக்கு ஒரு முறை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, இன்று தொடங்கிய புதிய நிதியாண்டின் முதல் காலாண்டுக்கு (ஏப்ரல்-ஜூன்) தேசிய சேமிப்பு பத்திரம், கிஷான் விகாஸ் பத்திரம் மற்றும் பி.பி.எப். உள்ளிட்ட அனைத்து சிறுசேமிப்புளுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது. இந்த காலாண்டுக்கு சிறுசேமிப்புகளுக்கான வட்டியை 1.40 சதவீதம் வரை குறைத்துள்ளது.

  சுகன்ய சம்ரிதி திட்டம்

  இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 1 முதல் 3 ஆண்டுகள் வரையிலான குறித்த கால டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் 6.9 சதவீதத்திலிருந்து 5.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டு குறித்த கால டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் 7.7 சதவீதத்திலிருந்து 6.7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகள் தொடர் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் 1.40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

  சிறுசேமிப்பு

  மூத்த குடிமக்களுக்கான சிறுசேமிப்பு திட்டங்களுக்கான (5 ஆண்டு காலம்) வட்டி விகிதம் 1.2 சதவீதம் குறைத்து  7.4 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சுகன்ய சம்ரிதி திட்டத்துக்கான வட்டி விகிதம் 7.6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பி.பி.எப். மற்றும் என்.எஸ்.சி. ஆகியவற்றுக்கான வட்டி விகிதம் முறையே 0.8 சதவீதம் மற்றும் 1.1 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. கிஷான் விகாஸ் பத்திரத்தின் முதிர்வு காலம் 124 மாதங்களாக அதிகரித்ததோடு, அதற்கான வட்டி விகிதத்தை 6.9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சேமிப்பு டெபாசிட்களுக்கான ஆண்டு விகிதம் தொடர்ந்து 4 சதவீதமாக நீடிக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.