சிசிடிவி காட்சிகளை ஷேர் செய்தால் குற்ற நடவடிக்கை – போலீசாருக்கு எச்சரிக்கை!

    0
    4
    மீன்

    கையில் கிடைத்த வீடியோவை வாட்சப்பில் உடனடியாக ஷேர் செய்யாவிட்டால் தெய்வகுத்தமாகிவிடும் அளவுக்கு பரபரவென ஆகிவிடுகிறது. சாலையில் நடக்கும் விபத்துகள், கொலை கொள்ளை முயற்சிகள், ப்ராங்க் ஷோக்கள் என எல்லாமே வீடியோவாகி, ஷேராகி, லைக்குகளாகவும் பரிணாம வளர்ச்சி அடைகின்றன. பொதுமக்கள்தான் இப்படி செய்கிறார்கள் என்றால், காவல்துறையினரில் சிலரும் தங்கள் கவனத்துக்கு வரும் முக்கிய வீடியோக்களை வாட்சப் குரூப்களில் ஷேர் செய்து பிரேக்கிங் நியூஸ் வெளியிட்டுவிட்டதாக புளகாங்கிதம் அடைகிறார்கள். ஆனால், சமயங்களில் குற்ற வழக்குகளில் முக்கிய தடயங்கள், சம்பவ இடங்களில் இருக்கும் சிசிடிவி காட்சிகளைகூட காவலர்கள் வெளியிட்டுவிடுகிறார்கள்.

    சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் பார்வைக்கும் வீடியோ காட்சிகள் போகும்போது, சாட்சியங்களை அழிப்பதற்கும், மாற்று ஏற்பாடுகள் செய்வதற்கும் தோதாக அமைந்துவிடுகிறது. எனவே, தங்கள் கவனத்துக்கு வரும் வீடீயோக்களை பொதுவெளியில் ஷேர் செய்யக்கூடாது என சென்னை சட்டம் ஒழுங்கு துணைகமிஷனர் சசிமோகன், போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். குற்ற வழக்குகளுக்கு கேமரா பதிவுகள் அறிவியல்பூர்வமான மிக முக்கிய சாட்சியாக எடுத்துக்கொள்ளப்படுவதால், அத்தகைய கேமரா பதிவுகளை போலீசார் வாட்ஸ் ஆப் குரூப்பில் செய்வது சாட்சிகளை கலைத்த குற்றமாக கருதப்படும். இனியும் ஷேர் செய்தால் சம்பந்தப்பட்டவர் மீது சாட்சியை கலைத்ததற்காக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும் என துணை கமிஷனர் சசிமோகன் எச்சரித்துள்ளார்.