சர்வதேச நிலவரங்களால் ஏற்றம் கண்ட பங்குவர்த்தகம்! சென்செக்ஸ் 164 புள்ளிகள் உயர்ந்தது

  0
  1
  பங்கு வர்த்தகம்

  சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இருந்ததால் பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 164 புள்ளிகள் உயர்ந்தது.

  ஜெர்மனியின் ஏற்றுமதி நிலவரம் திருப்தியாக இருந்தது. அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக போர் உக்கிரம் குறைந்தது போன்ற காரணங்களால் சர்வதேச பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. இருப்பினும் நம் நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 21 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாகன விற்பனை குறைந்தது என்ற தகவலால் பங்கு வர்த்தகத்தில் பெரிய ஏற்றம் தடைபட்டது.

  பங்கு வர்த்தகம்

  சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவனங்களில், யெஸ்பேங்க், மாருதி, பார்தி ஏர்டெல், எல் அண்டு டி, ஸ்டேட் வங்கி, மகிந்திரா அண்டு மகிந்திரா உள்பட 20 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. எச்.சி.எல். டெக்னாலஜிஸ், இன்போசிஸ், டெக்மகிந்திரா, பஜாஜ் ஆட்டோ, டி.சி.எஸ். உள்பட 10 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

  பங்கு வர்த்தகம்

  மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,604 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 934 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும் 181 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.141.13 லட்சம் கோடியாக உயர்ந்தது. கடந்த வெள்ளக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.140.28 லட்சம் கோடியாக இருந்தது.

  இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 163.68 புள்ளிகள் அதிகரித்து 37,145.45 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 56.85 புள்ளிகள் உயர்ந்து 11,003.05 புள்ளிகளில் முடிவுற்றது.