சந்திரயான் 3 மிஷனுக்கு அவசரமாக ரூ.75 கோடி வேணும்! மத்திய அரசுக்கு இஸ்ரோ கோரிக்கை

  19
  இஸ்ரோ

  சந்திரயான் 3 மிஷனை செயல்படுத்த அவசரமாக ரூ.75 கோடி வேண்டும் என்று மத்திய அரசுக்கு இஸ்ரோ கோரிக்கை விடுத்துள்ளது.

  நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்யும் நோக்கில் சந்திரயான் 2வை கடந்த ஜூலையில் விண்ணில் ஏவியது இஸ்ரோ. திட்டமிட்டப்படி, சந்திரயான் 2 தனது பயணத்தை தொடர்ந்தது. முதலில் ஆர்ப்பிட்டரை நிலவின் சுற்று வட்டப்பாதையில் கழற்றி விடப்பட்டது. இதனையடுத்து கடந்த செப்டம்பர் 7ம் தேதி அதிகாலையில் நிலவில் சந்திரயான் 2வின் விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில், நிலவின் மேற்பரப்பு மேல் 2.1 கி.மீட்டர் தொலைவில் விக்ரம் லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் சந்திரயான் 2 மிஷன் பின்னடைவை சந்தித்தது.

  சந்திரயான் 2

  இதனையடுத்து சந்திரயான் 3 திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முடிவு எடுத்தது. இதற்கான பணிகளில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சந்திரயான் 3 திட்டத்தை நடைமுறைப்படுத்த அவசரமாக ரூ.75 கோடி வேண்டும் என மத்திய அரசிடம் இஸ்ரோ கோரிக்கை விடுத்துள்ளது. இந்த நிதியாண்டுக்கு (2019-20) இஸ்ரோவின் பட்ஜெட்டுக்காக ரூ.666 கோடி வழங்கப்பட்டது. தற்போது இஸ்ரோ தற்போதைய பட்ஜெட்டை காட்டிலும் கூடுதலாக ரூ.75 கோடி கேட்டுள்ளது. 

  சந்திரயான் 2
  இஸ்ரோ கேட்டுள்ள ரூ.75 கோடியில், இயந்திரங்கள், கருவிகள் மற்றும் இதர மூலதன செலவினங்களுக்காக ரூ.60 கோடியும், இதர வருவாய் செலவினங்களாக மிச்சமுள்ள ரூ.15 கோடியும் பயன்படுத்தப்பட உள்ளது. அடுத்த ஆண்டு நவம்பருக்குள் சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.