கொரோனா முன்னெச்சரிக்கையாக திருப்பதி ஏழுமலையான் கோவில் மலைப்பாதை மூடல்!!

  10
  tirumala temple

  கொரோனா அச்சம் காரணமாக, திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள அனைத்து வழிப்பாட்டு தலங்களும் மூடப்படுவதாக ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.

  கொரோனா அச்சுறுத்தலால் கோயில் போன்ற பொது இடங்களில் பக்தர்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்குமாறு மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வந்தன. பக்தர்கள் அதிகம் கூடும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சளி, இருமல், காய்ச்சல் அறிகுறிகள் உள்ள பக்தர்கள் வர வேண்டாம் என்று தேவஸ்தான நிர்வாகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. மேலும் வெளிநாடுவாழ் இந்தியர்கள், வெளிநாட்டினர்களுக்கு திருப்பதி கோவிலுக்கு வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

  tirupathi temple

  இந்நிலையில் திருமலை திருப்பதிக்கு வந்த மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த 20  பக்தர்களில் ஒருவருக்கு , கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது.  இதனையடுத்து தற்போது, கட்டண தரிசன சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக, திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

  வரும் மே மாதம் வரை, 300 ரூபாய் கட்டண தரிசனம், கட்டண சேவை, தங்கும் அறைகளுக்கான முன்பதிவு அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
   

  tirupathi temple

  இதைத்தொடர்ந்து, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது தரிசனத்துக்காக காத்திருக்கும் பக்தர்கள் மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும்,  புதிதாக பக்தர்கள் யாரும் திருமலைக்கு வராதவண்ணம் திருப்பதி மலைப்பாதை, நடைபாதை ஆகியவை தற்காலிகமாக மூடப்படுகிறது எனவும் மாநில அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.