கொரோனா பாதிப்புக்கு ரூ. 150 கோடி நிதியுதவி அளித்த ஹெச்டிஎஃப்சி..

  0
  3
  representative image

  உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  சீனாவில் கொரோனாவின் பாதிப்புகள் குறைந்திருந்தாலும், மற்ற நாடுகள் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா பாதிப்பால் இதுவரையில் 50 பேர் உயிரிழந்துள்ளதோடு, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக ஏப்ரல் 14ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  representative image

  கொரோனா உறுதிசெய்யப்பட்டவர்களுக்குத் தீவிரமான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகள் சார்பாக கொரோனா பாதிப்பு நிவாரணமாக அதிக நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பிரதமரின் அவசர கால நிதியில் திரைப்பிரபலங்கள் உள்ளிட பல்வேறு தரப்பினர் பணம் கொடுத்து உதவி வருகின்றனர்.

  டாடா குழுமம் சார்பில் ரூ.1500 கோடி நிதி வழங்கப்பட்டது. இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் இந்தியா தன் பங்குக்கு ரூ.100 கோடி நிதியுதவியை வழங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது, வீட்டுக் கடன் நிதி நிறுவனமான ஹெச்டிஎஃப்சி,  கொரோனா பாதிப்பு நிவாரணமாக ரூ.150 கோடியை வழங்கியிருக்கிறது. பிரதமரின் அவசர கால நிவாரண நிதியில் இத்தொகை செலுத்தப்படுகிறது.

  Deepak Parekh

  இதுகுறித்து ஹெச்டிஎஃப்சி லிமிடெட் நிறுவனத் தலைவரான தீபக் பாரிக் கூறியதாவது, “தற்போது நிலவும் சூழலானது நம் அனைவருக்கும் சவாலான மற்றும் நிலையற்ற சூழலாகும். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மத்திய மாநில அரசுகள், காவல் துறையினர், ராணுவத் துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு உறுதுணையாக ஹெச்டிஎஃப்சி நிறுவனமும் நிதியுதவி வழங்குகிறது” என்று தெரிவித்துள்ளார்.