கொரோனா எதிரொலி! 200 பணியாளர்களின் ஒப்பந்தம் ரத்து… 30ம் தேதி வரை முன்பதிவு இல்லை.. ஏா் இந்தியா தகவல்…

  0
  2
  ஏர் இந்தியா

  கொரோனா வைரஸ் எதிரொலியாக, பைலட் உள்பட 200 பணியாளர்களின் ஒப்பந்தத்தை ஏர் இந்தியா நிறுவனம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. மேலும் இம்மாதம் 30ம் தேதி வரை டிக்கெட் முன்பதிவு செய்யப்படாது என தெரிவித்துள்ளது.

  கொரோனா வைரஸ் காரணமாக நாடே முடங்கி கிடக்கிறது. போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏர் இந்தியா நிறுவனங்கள் விமான நிலையங்களில் ஒரமாக நிறுத்தப்பட்டுள்ளன. வருமானம் இல்லாததால் செலவுகளை குறைக்க வேண்டிய நிலைக்கு ஏர் இந்தியா தள்ளப்பட்டது. இதனையடுத்து விமான பணியாளர்களை தவிர்த்து மற்ற பணியாளர்களின் அலவன்ஸில் 10 சதவீதத்தை (3 மாதங்களுக்கு) குறைத்தது. 

  ஏர் இந்தியா விமானங்கள்

  இந்நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று பைலட் உள்பட 200 பணியாளர்களின் ஒப்பந்தத்தை தற்காலிகமாக ரத்து செய்தது. இவர்கள் அனைவரும் ஓய்வு பெற்ற பிறகு மீண்டும் பணியமர்த்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களுக்கான டிக்கெட் முன்பதிவை இம்மாதம் 30ம் தேதி வரை நிறுத்தியுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

  டிக்கெட் முன்பதிவு கிடையாது

  இது தொடர்பாக ஏர் இந்தியாவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ஏப்ரல் விமானங்களுக்கான டிக்கெட் விற்பனை மீண்டும் தொடங்குவது குறித்து முடிவு செய்ய, ஏப்ரல் 14ம் தேதி இரவு 11.59 மணிக்கு லாக்டவுன் முடிவுக்கு வருமா அல்லது நீடிக்கப்படுமா என்ற மத்திய அரசின் முடிவுக்காக காத்திருக்கிறோம் என தெரிவித்தார். அதேசமயம் ஸ்பைஸ்ஜெட், கோஏர் போன்ற விமான சேவை நிறுவனங்கள் ஏப்ரல் 15க்கு பிறகான உள்நாட்டு விமானங்களுக்கான டிக்கெட் விற்பனையை தொடங்கி விட்டன. அதேவேளையில், வெளிநாட்டு விமானங்களுக்கான டிக்கெட் விற்பனையை மே 1ம் தேதிதான் தொடங்குகின்றன.