காஷ்மீர் மக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாக கூறி ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜினாமா…

  0
  1
  pjimage (9)

  காஷ்மீர் மக்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுவதால், ஐ.ஏ.எஸ். பணியிலிருந்து விலகுவதற்கான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளதாக ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  தாத்ரா மற்றும் நகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் பல முக்கிய துறைகளில் செயலாளராக இருப்பவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன் கோபிநாதன். அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஐ.ஏ.எஸ். பணியிலிருந்து விலக போவதாக கூறினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: கடந்த 21ம் தேதி ஐ.ஏ.எஸ். பணியிலிருந்து விலகுவது தொடர்பாக ஆவணங்களை தாக்கல் செய்தேன். 

  கண்ணன் கோபிநாதன் ஐ.ஏ.எஸ்.

  கடந்த சில வாரங்களாக காஷ்மீரில் லட்சக்கணக்கான மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதை எனது பதவி விலகலுக்கான காரணங்களில் ஒன்றாக குறிப்பிட்டுள்ளேன். 20 நாட்களாக காஷ்மீரில் லட்சக்கணக்கான மக்களின் அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்பட்டது. இதற்கு பெரும்பான்மை இந்தியா ஆதரவாக உள்ளது. 2019ல் இந்தியாவில் இது நடைபெறுகிறது. 

  சிறப்பு உரிமை ரத்து செய்யப்பட்டது பிரச்சினை அல்ல. அதனை வரவேற்பதற்கும், எதிர்ப்பதற்கும் குடிமக்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறது என்பதுதான் பிரச்சினை. அதனை வரவேற்பதும், எதிர்ப்பதும் அவர்களது அடிப்படை உரிமை. என் ராஜினாமாவால் எதுவும் நடக்கபோவதில்லை. ஆனால் ஒவ்வொருவருக்கும் சொந்தமாக மனசாட்சி இருக்கிறது அதற்கு பதில் அளிக்க வேண்டும் என நினைக்கிறேன். இவ்வாறு தெரிவித்து இருந்தார்.

  கண்ணன் கோபிநாதன்

  தாத்ரா மற்றும் நகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில், நஷ்டத்தில் இயங்கி வந்த அரசுக்கு சொந்தமான மின் விநியோக நிறுவனத்தை லாப பாதைக்கு மாற்றி காட்டியவர் கண்ணன் கோபிநாதன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த ஆண்டு கேரள வெள்ளத்தின் போது தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பதை காட்டி கொள்ளாமல் நிவாரண  பணிகளை மேற்கொண்டது கண்ணன் கோபிநாதனை வெளிஉலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது. 2012 பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியான கோபிநாதன் பதவிக்கு வந்த 7 ஆண்டுகளில் பதவியை ராஜினாமா செய்து இருப்பது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.