காஷ்மீரில் சிக்கிய 900 லாரி டிரைவர்களை மீட்க வேண்டும்! – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

  0
  17
  அன்புமணி

  ஆப்பிள் ஏற்றிவர காஷ்மீர் சென்ற 900 லாரி டிரைவர்கள் அங்கு நிலவும் கடும் பனிப்பொழிவில் சிக்கியுள்ளதாகவும் அவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
  இது தொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

  ஆப்பிள் ஏற்றிவர காஷ்மீர் சென்ற 900 லாரி டிரைவர்கள் அங்கு நிலவும் கடும் பனிப்பொழிவில் சிக்கியுள்ளதாகவும் அவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
  இது தொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

  rama

  “ஆப்பிள் ஏற்றி வருவதற்காக காஷ்மீர் சென்ற தமிழக சரக்குந்து ஓட்டுனர்கள் 900-க்கும் மேற்பட்டோர்  கடுமையான பனிப்பொழிவில் சிக்கி, கடந்த 13 நாட்களாக அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களை அங்கிருந்து வெளியேற காஷ்மீர் நிர்வாகம் அனுமதி அளிக்க மறுத்து வருவது கண்டிக்கத்தக்கதாகும். தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு காஷ்மீரில் இருந்து ஆப்பிள் ஏற்றி வருவதற்காக சேலம், நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 450க்கும் மேற்பட்ட சரக்குந்துகள் கடந்த நவம்பர் 10-ம் தேதி புறப்பட்டன. அவை ஆப்பிள் ஏற்றிக் கொண்டு கடந்த 7-ம் தேதி   காஷ்மீரின் சோபியான் பகுதியிலிருந்து புறப்படவிருந்த நேரத்தில் கடும் பனிப்பொழிவு தொடங்கியது. அதனால் காஷ்மீரில் சாலைப்போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், ராணுவத்தினரின் உதவியுடன் சாலைகளில் பனி அகற்றப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

  snow

  எனினும் போக்குவரத்தை முழுமையாக சீரமைக்க முடியாத நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வாகனத்தை மட்டும் பாதுகாப்பாக அங்கிருந்து  வெளியேற அனுமதித்த காஷ்மீர் அரசு, சரக்குந்து உள்ளிட்ட வாகனங்கள் வெளியேற அனுமதிக்கவில்லை.
  இதனால் தமிழகத்திலிருந்து சென்ற 450-க்கும் மேற்பட்ட சரக்குந்துகளின் ஓட்டுனர்கள், உதவியாளர்கள் என 900-க்கும் மேற்பட்டோர் காஷ்மீரில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்கள் தமிழகத்திலிருந்து புறப்பட்டுச் சென்று 40 நாட்களுக்கு மேலாகிவிட்டதால், எடுத்துச் சென்றிருந்த உணவுப் பொருட்கள் தீர்ந்து விட்டன. காஷ்மீரில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காத பகுதியில் முடக்கப்பட்டிருக்கும் அவர்கள் கடந்த 13 நாட்களுக்கும் மேலாக உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். கடுமையான பனிப்பொழிவில் சிக்கியுள்ள அவர்களில் பலருக்கு மோசமான உடல்நலக் குறைவும் ஏற்பட்டிருக்கிறது. மருத்துவம் எடுத்துக் கொள்வதற்கான வசதிகளும் இல்லாததால் அவர்களின் அவதி அதிகரித்துள்ளது.

  kashmir

  பனிப்பொழிவால் சாலைகள் மூடப்படும் சூழலில் முடிந்தவரை சாலைகளை சீரமைத்து முன்னுரிமை அடிப்படையில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் வெளியேற வசதி செய்து தருவது இயல்பானது தான். அதில் தவறு இல்லை. ஆனால், சரக்குந்து வாகனங்களை 13 நாட்களுக்கும் மேலாக முடக்கி வைப்பது நியாயமல்ல. சரக்குந்து ஓட்டுனர்களில் பலர் வயது முதிர்ந்தவர்களாகவும், உடல் நலக்குறைவு கொண்டவர்களாகவும் இருக்கக்கூடும். அவர்களால் எத்தனை நாட்களுக்குத் தான் பனிப்பொழிவை தாங்கிக் கொண்டு இருக்க முடியும்? என்பதை காஷ்மீர் அரசு நிர்வாகம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

  kashmir

  காஷ்மீரில் பெரும்பான்மையான சுற்றுலா வாகனங்கள் வெளியேற்றப்பட்டு விட்ட நிலையில், அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள  தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் சரக்குந்துகளை வெளியேற்ற அனுமதிக்க வேண்டும். ஒரே நேரத்தில் இல்லாவிட்டாலும் அணி அணியாகவாவது சரக்குந்துகளை   பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டும். அதுவரை சரக்குந்து ஓட்டுனர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளை காஷ்மீர் அரசு வழங்க வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசிடமும், காஷ்மீர் ஆளுனரிடமும் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.”