காவல் பணி முடிந்தவுடன் வீட்டில் மாஸ்க் தைக்கும் பணி…..மக்களின் இதயங்களை வென்ற மத்திய பிரதேச பெண் போலீஸ்

  0
  5
  பெண் காவலர் ஸ்ரீஷ்டி ஷ்ரோத்ரியா

  மத்திய பிரதேசத்தில் காவல் பணி முடிந்தவுடன், வீட்டுக்கு சென்று சமூக அக்கறையுடன் மாஸ்க் தயாரித்து தேவைப்படுபவர்களுக்கு வழங்கும் பெண் போலீஸ் ஒருவரின் பெருந்தன்மையான செயல் மக்களின் இதயங்களை வென்றுள்ளது.

  மத்திய பிரதேச மாநிலம் குராய் நகர் காவல் நிலையத்தில் பெண் போலீசாக வேலை பார்த்து வருபவர் ஸ்ரீஷ்டி ஷ்ரோத்ரியா. இவர் தற்போது தினமும் தனது காவல் பணி முடிவடைந்தவுடன் வீட்டுக்கு சென்று நூற்றுக்கணக்கான முகமூடிகளை தைத்து தேவைப்படும் நபர்களுக்கு வழங்கி வருகிறார். தற்போது இவரது மாஸ்க் அந்த பகுதியில் பிரபலமாகி வருகிறது. அதிக விலை கொடுத்து வாங்க முடியாதவர்களுக்கு ஸ்ரீஷ்டி ஷ்ரோத்ரியா தயாரித்து கொடுக்கும் முகமூடிகள் கொரோனா வைரசிலிருந்து தற்காத்து கொள்ள பெரிதும் பயன் உள்ளதாக உள்ளது.

  மாஸ்க் அணிந்து வெளியே வரும் மக்கள்

  மாஸ்க் தைப்பது தொடர்பாக பெண் காவலர் ஸ்ரீஷ்டி ஷ்ரோத்ரியா ஷ்றுகையில், தொற்று நோயான கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதன் காரணமாக மருந்தகங்கள் அதிக விலைக்கு முகமூடிகளை விற்பனை செய்வதே உணர்ந்தேன். பாதுகாப்புக்கு முகமூடி அவசியம் என்பதால் அதனை சொந்தமாக தயாரிக்க முடிவு செய்தேன். சக காவலர்களுக்கும், மக்களுக்கும் உதவ முடிகிறது என்பதால் முகமூடிகளை தைப்பது எனக்கு திருப்தி அளிக்கிறது என தெரிவித்தார்.

  பெண் காவலர் ஸ்ரீஷ்டி ஷ்ரோத்ரியா

  காவல் பணி முடிந்தவுடன் சமூக சேவகராக மாறிவிடும் ஸ்ரீஷ்டி ஷ்ரோத்ரியாவின் பெருந்தன்மையால் ஈர்க்கப்பட்ட அவருடன் வேலைபார்க்கும் சக காவலர்கள், அவர் மாஸ்க் தைப்பதை வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். எதிர்பார்த்தமாதிரியே அந்த வீடியோ வைரலாகியது. மேலும் ஸ்ரீஷ்டி ஷ்ரோத்ரியா மக்களின் மனதையும் வென்றார்.