கார்த்தி சிதம்பரத்துக்கு சீட் கிடைத்ததன் பின்னணி? தில்லியில் நடந்தது என்ன!

  0
  1
  கார்த்தி சிதம்பரம் (கோப்புப்படம்)

  நீண்ட இழுபறிக்கு பின்னர் அறிவிக்கப்பட்ட சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் தேர்வின் பின்னணியில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன

  சென்னை: நீண்ட இழுபறிக்கு பின்னர் அறிவிக்கப்பட்ட சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் தேர்வின் பின்னணியில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

  நாடாளுமன்ற மக்களவை தேர்தல் களம் நாடு முழுவதும் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அறிவித்து பிரசாரத்தை தொடங்கிய போது, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, வெளியான அக்கட்சியின் வேட்பாளர் பட்டியலில் சிவகங்கை தொகுதி மட்டும் விடுபட்டிருந்தது.

  அந்த தொகுதியில், பாஜக-காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவும் நிலையில், சிவகங்கையில் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்தது. அந்த தொகுதிக்கு சுதர்ஷன் நாச்சியப்பன், முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட பலர் முட்டி மோதினர்.

  sudharsana nachiyappan

  இந்த சூழலில் வெளியான சிகங்கை தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலில் கார்த்தியின் பெயர் இடம்பெற்றிருந்தது. இதனால், அந்த தொகுதி தனக்கு கிடைக்கும் என நம்பிக்கையில் இருந்த சுதர்ஷன் நாச்சியப்பன், தனது அதிருப்தியை வெளிப்படையாக வெளியிட்டார். அத்துடன், ப.சிதம்பரம் தன்னுடைய வளர்ச்சியை தடுத்ததாக கூறி அவரது குடும்பத்தினர் மீது விமர்சனங்களை வாரி இறைத்தார்.

  அவரது அதிருப்திக்கு காரணமும் இருக்கிறது. வேட்பாளர் தேர்வுக்குழுவில் இருந்த 13 பேரில் ஏழு பேர் கார்த்தி ஆதரவாக இருந்துள்ளனர். அதேசமயம், மீதமிருந்தவர்கள் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு தான் பதவி என்ற ராகுலின் அறிவுறுத்தலையும் சுட்டிக் காட்டியுள்ளனர். இதையடுத்து, பட்டியல் வெளியான கடந்த 24-ம் தேதி காலையில் சுதர்ஷன் நாச்சியப்பனை அழைத்த ராகுல், நீங்கள் தான் சிவகங்கையின் வேட்பாளர். வேட்புமனுத் தாக்கலுக்கான வேலைகளை பாருங்கள் என கூறியுள்ளார். ஆனால், இரவில் வெளியான வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இல்லாதது தான் நாச்சியப்பனின் அதிருப்திக்கு காரணம்.

  chidambaram

  இதற்கிடையே, என்ன நடந்திருக்கும் என காங்கிரஸ் கட்சிக்குள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முந்தைய நாள் இரவு வரை கார்த்திக்கு ஆதரவான சூழல் தில்லியில் இல்லையாம். ஆனால், முன்னாள் பிரதமர் மன்மோகனிடம் ப.சிதம்பரம் பேசியது தன நிலைமை தலைகீழாக மாறுவதற்கு காரணம் என தில்லி வட்டாரங்கள் தெரிவிகின்றன. பாஜக அரசு தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கொடுக்கும் நெருக்கடிகளை மன்மோகனிடம் உருக்கமாக கூறியுள்ளார் சிதம்பரம்.

  அத்துடன், மூப்பனாருக்கு பிறகு, காங்கிரசின் ஒரே முகமாக தமிழகத்தில் இருக்கும் என்னையும் எனது குடும்பத்தினரையும் அப்புறப்படுத்த பாஜக முயற்சி செய்து வருகிறது. நான் மாநிலங்களவை எம்.பி., என்பதால், கார்த்தியை தவிக்க விடலாமா? அவனுக்கு கட்சியை விட்டால் வேறு யார் ஆதரவு என தெரிவித்துள்ளார். இதையே காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரிடமும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

  sonia

  இதனால், வேட்பாளர் தேர்வில் தலையிடாமல் இருந்த மன்மோகன் இதுகுறித்து சோனியாவிடம் பேசியதாக தெரிகிறது. மேலும், ராகுல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமையும் போது சிதம்பரம் அவருக்கு ஒத்துழைப்பாக இருப்பார். இதே நிலைமை 2004-ஆம் ஆண்டில் வந்த போது சிதம்பரத்தை காங்கிரஸ் கட்சிக்கு அழைத்து வந்து நிதி அமைச்சாராக்கினோம். சுதர்ஷன் நாச்சியப்பனை மாநிலங்களவை உறுப்பினராக்கி அமைச்சராக்கினோம் எனவும் சோனியாவிடம் அவர் தெரிவித்துள்ளார். இப்படி பல தரப்பில் இருந்து அழுத்தங்கள் வரவே, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் பேசிய பின்னர், கார்த்தியை வேட்பாளராக அறிவிக்க ராகுல் ஒப்புக் கொண்டாராம்.

  rahul

  கடந்த 1999 தேர்தலில் மூப்பனாரின் தாமாக சார்பில் சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட ப.சிதம்பரத்தை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சுதர்ஷன் நாச்சியப்பன் அங்கு வீழ்த்தி வெற்றி பெற்றார். பின்னர் 2004-ஆம் ஆண்டு தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைந்த சிதம்பரத்துக்கு சீட் கொடுக்கக் கூடாது என நாச்சியப்பன் போர்க்கொடி தூக்கினார். அவரை சமாதானப்படுத்தி மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கட்சித் தலைமை கொடுத்தது. அந்த தேர்தலில் சிதம்பரத்துக்கே சீட் கொடுக்கப்பட்டு அவர் வெற்றி பெற்றார்.

  எனவே, தொடக்கம் முதலே சிதம்பரம் மீது கடுப்பில் இருக்கும் சுதர்ஷன் நாச்சியப்பன் இந்த முறை வெளிப்படையாகவே தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். எனவே, அவரது ஆதரவாளர்கள் உள்ளடி வேலைகளை பார்க்கக் கூடும் என தெரிகிறது. சிவகங்கை காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தாலும், இந்த முறை வெற்றி பெற கார்த்தி கடுமையாக போராட வேண்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

  இதையும் வாசிங்க

  பொள்ளாச்சி விவகாரம்: அ.தி.மு.க.வை தொடர்ந்து தி.மு.க நிர்வாகி மகனுக்கு சம்மன்; அதிர்ச்சியில் தி.மு.க தலைமை!