கல்விக்காக மட்டும் புது சேனல்… முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்…

  0
  3
  கல்வி தொலைக்காட்சி

  தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடையே கற்றலை மேம்படுத்தவும், தகவலை எளிதில் கொண்டு சேர்க்கும் விதமாகவும், கல்வி தொலைக்காட்சி என்ற பெயரில் புதிய, 24 மணி நேர சேனலை முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்.

  தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடையே கற்றலை மேம்படுத்தவும், தகவலை எளிதில் கொண்டு சேர்க்கும் விதமாகவும், கல்வி தொலைக்காட்சி என்ற பெயரில் புதிய, 24 மணி நேர சேனலை முதல்வர் இன்று தொடங்கி வைத்தார். இதற்காக சென்னை ராஜா அண்ணாமலைபுரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தின் 8-ஆவது தளத்தில் புதிய தொலைக்காட்சிக்கான அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில் ரூ. 1 கோடி மதிப்பில் தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பத் தேவையான காட்சியரங்கம், ஒளிப்பதிவுக் கூடங்கள், தொழில்நுட்ப சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

  இந்தத் தொலைக்காட்சி ஆரம்பப் பள்ளி முதல் பிளஸ் 2 வரை உள்ள அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயனுள்ளத் தகவலை வழங்க உள்ளது. பாடத் திட்டங்களுக்குள்தான் பயிற்சிகள் வழங்கப்படும். அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உள்ள தொலைக்காட்சி மூலம் இந்த கல்வித் தொலைக்காட்சி சேனலை பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட வகுப்புக்கான ஒளிபரப்பை அந்த வகுப்பு மாணவர்கள் கண்டறிந்து பயன்பெறுவர். மீண்டும், மாலையில் மறு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதால் வீட்டில் சென்றும் மாணவர்கள் கல்வித் தொலைக்காட்சி சேனலை பார்த்து பயன்பெற முடியும். இந்திய அளவில் கல்வித் துறையின் முன்னோடி திட்டமாக அமைய உள்ள தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி இன்று முதல் ஒளிபரப்பாக உள்ளது.   

  channel

  இதனை தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் 53 ஆயிரம் பள்ளிகளில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இன்று நடைபெறும் தொடக்க விழாவையும் அனைத்து பள்ளிகளிலும் ஒளிபரப்ப தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சிகளை பள்ளிகளில் காண மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும், தலைமை ஆசிரியர்கள் உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. கேபிள் இணைப்பு உள்ள பள்ளிகள், Projector மூலம் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேபிள் இணைப்பு இல்லாத பள்ளிகள், YouTube மூலம் Projector-ஐ Connect செய்து நேரலை செய்ய வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ- மாணவிகளின் திறமையை வெளிப்படுத்தச் செய்யும் நிகழ்ச்சிகளுக்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. யோகா, உடற்பயிற்சி, பள்ளிகளின் செயல்பாடு, ஆங்கிலப் பயிற்சி, கணிதப் பயிற்சி ஆகியவற்றுடன், நீட் போன்ற போட்டித் தேர்வுகளுக்கான ஆலோசனைகள், இணையதளம் குறித்த தகவல்கள் ஆகியவை இந்த சேனலில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் சிலவாகும்.