கர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள் இன்று அறிவிப்பு! 4 மாத கால பா.ஜ.க. அரசு ஆட்சியை தக்க வைக்குமா?

  9
  பா.ஜ.க.

  கர்நாடகாவில் நடந்து முடிந்த 15 தொகுதிகள் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. மதியத்துக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக, பா.ஜ.க. அரசு நீடிக்குமா என்பது இன்று மதியத்துக்குள் தெரிந்து விடும்.

  கர்நாடகாவில் கடந்த 5ம் தேதியன்று காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க. குறைந்தபட்சம் 6 இடங்களை கைப்பற்றினால் மட்டுமே ஆட்சியை தக்க வைத்து கொள்ள முடியும். இதனால் பா.ஜ.க. முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அரசை பொறுத்தவரை இந்த இடைத்தேர்தல் வாழ்வா, சாவா என்ற நிலையில் உள்ளது. 

  கர்நாடக அரசியல் தலைவர்கள்

  கர்நாடகாவில் நடந்து முடிந்த 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஒட்டு மொத்த அளவில் 66.59 சதவீத வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து இருந்தனர். மேலும் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. இந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க. குறைந்தபட்சம் 8 இடங்களிலும், அதிகபட்சமாக 12 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் தெரிவித்தன.

  பா.ஜ.க. முதல்வர் எடியூரப்பா

  இந்த சூழ்நிலையில், கர்நாடகாவில் இன்று 15 தொகுதிகள் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 11 மையங்களில் இன்று காலை 8 மணி அளவில் தொடங்குகிறது. இன்று மதியத்துக்குள் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 4 மாத கால பா.ஜ.க. அரசு தொடர்ந்து நீடிக்குமா என்பதை இன்று மதியத்துக்குள் அறிந்து கொள்ளலாம்.