கனவு மெய்ப்பட்டது; ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்று இந்தியா வரலாற்று சாதனை

  0
  5
  teamindia

  வரலாற்றில் முதல்முறையாக இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது

  -குமரன் குமணன்

  சிட்னி: வரலாற்றில் முதல்முறையாக இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.

  இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற இரு அணிகள் இடையேயான இருபது ஒவர் தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

  இதையடுத்து,  நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெர்த் நகரில் நடைபெற்ற இரண்டாம் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மெல்போர்னில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று முன்னிலை வகித்து வந்தது.

  இந்நிலையில், இந்தியா ஆஸ்திரேலியா அணிகளிடையேயான இறுதி மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா,கிட்டத்தட்ட இரண்டாம் நாளின் இறுதிக்கட்டம் வரை விளையாடி 167.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

  புஜாரா 193 ரன்களும், ரிஷப் பண்ட் 159 ரன்களும் குவித்தனர். ஜடேஜா மற்றும் அகர்வால் முறையே 81 மற்றும் 77 ரன்கள் திரட்டினர். ஆஸ்திரேலிய தரப்பில் லியோன் 4 விக்கெட்டுகளும் ஹேசில்வுட் இரண்டு விக்கெட்டுகளும் ஸ்டார்க் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

  இரண்டாம் நாளின் கடைசி பத்து ஒவர்களின் மூலம் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி அன்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த நாள் 73.3 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் ஆட்டம் முடிந்தபோது 6 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்தது.

  நான்காம் நாளும் மழை தொடர்ந்ததால் தாமதமாக தொடங்கிய ஆட்டத்தின் 21.2 ஓவர்கள் வரை நீடித்த ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸ் 300 ரன்களில் முடிவுக்கு வந்தது. மார்கஸ் ஹாரிஸ் எடுத்த 79 ரன்களே அதிகபட்ச தனி நபர் ஸ்கோராக இருந்தது. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளும், பும்ரா, ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளும் ஷமி ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

  322 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஃபாலோ ஆன் ஆகி இரன்டாவது இன்னிங்ஸில் 4 ஓவர்களில் விக்கெட் இழக்காமல் 6 ரன்களை எடுத்திருந்த நிலையில் நான்காம் நாள் ஆட்டம் வெறும் 25.2 ஓவர்களே வீசப்பட்டு முடிவுக்கு வந்தது.

  இந்நிலையில், இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளிடையேயான சிட்னி டெஸ்ட் போட்டியின் இறுதி நாளான இன்று வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் ஓரு பந்து கூட வீசப்படாத நிலையிலேயே கைவிடப்பட்டது. இதனால் போட்டி டிராவில் முடிந்தது.

  இதன் மூலம், 71 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. ஆட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாகவும் புஜாரா தேர்வு செய்யப்பட்டார். ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது.

  ஆசிய நாடுகள் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு வெளியே இதற்கு முன் இந்திய டெஸ்ட் அணி இதுவரை இங்கிலாந்தில் மூன்று முறை தொடரை வென்றுள்ளது. (அஜீத் வடேகர் தலைமை தாங்கிய 1971-72 தொடர், திலீப் வெங்ஸர்கார் தலைமையேற்ற 1986 தொடர் மற்றும் ராகுல் டிராவிட் தலைமையேற்ற 2007 தொடர்). அதேபோல், நியூசிலாந்தில் 1967-68 மற்றும் 2009 ஆண்டுகளில் மன்சூர் அலி கான் பட்டோடி, தோனி ஆகியோர் தலைமையில் தொடர்களை வென்றிருக்கிறது. 

  தென் ஆப்பிரிக்காவில் இன்னும் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதில்லை. 2010-11ஆம் ஆண்டு டிராவிட் தலைமையிலான அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்தது தான் அந்நாட்டில் இந்தியாவின் சிறந்த தொடர்.