கட்டண உயர்வால் ஜியோ உள்ளிட்ட மொபைல் நிறுவனங்களுக்கு ரூ.60,570 கோடி கிடைக்குமாம்!

  0
  6
  தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள்

  கட்டண உயர்வு நடவடிக்கையால், அடுத்த நிதியாண்டில் (2020-21) ஜியோ, ஏர்டெல் உள்பட அனைத்து மொபைல் நிறுவனங்களின் செயல்பாட்டு லாபம் 2 மடங்குக்கு மேல் அதிகரித்து ரூ.60,570 கோடியாக உயரும் என தகவல் வெளியாகியுள்ளது.

  தொலைத்தொடர்பு துறையில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் காலடி வைத்தபிறகு கடந்த சில ஆண்டுகளாக தொலைத்தொடர்பு சேவை கட்டணங்கள் மிகவும் குறைந்தன. ஜியோவின் கட்டண குறைப்பு மற்றும் அதிரடி சலுகைகளால் மொபைல் வாடிக்கையாளர்கள் அந்நிறுவனம் பக்கம் சாய தொடங்கினர். மேலும் ஜியோவின் போட்டியை சமாளிக்க முடியாமல் பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை நிறுத்தி விட்டன.

  மொபைல் வாடிக்கையாளர்கள்

  ஜியோவின் போட்டியை சமாளித்து பார்தி ஏர்டெல், வோடாபோன் ஐடியா மற்றும் பி.எஸ்.என்.எல். ஆகிய நிறுவனங்கள்  தொழில் செய்து வருகின்றன. மேலும், ஜியோவுக்கு போட்டியாக அந்நிறுவனங்களும் கட்டண குறைப்பு நடவடிக்கையை கையில் எடுத்தன. இதனால் அந்த நிறுவனங்களின் வருவாய் கடுமையாக பாதித்தது. மேலும், சரிசெய்யப்பட்ட விவகாரத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மொத்தம் ரூ.1.47 லட்சம் கோடியை தொலைத்தொடர்பு துறைக்கு செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் நிறுவனத்தை தொடர்ந்து நடத்த வேண்டுமானால் கட்டணத்தை  உயர்த்த வேண்டும் என்ற நிலைக்கு அந்த நிறுவனங்கள் தள்ளப்பட்டன.

  வோடாபோன் ஐடியா

  இந்த சூழ்நிலையில், கடந்த சில தினங்களுக்கு ஏர்டெல், வோடாபோன் ஐடியா மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் புதிய கால் மற்றும் டேட்டா திட்டங்களை அறிவித்தன. இந்த புதிய திட்டங்களுக்கான கட்டணம் பழைய திட்டங்களை காட்டிலும் 40 சதவீதத்துக்கும் அதிகமாகும். 

  வருவாய்

  தொலைத்தொடர்பு துறை நிறுவனங்களின் இந்த கட்டண உயர்வு நடவடிக்கையால் அடுத்த நிதியாண்டில் அந்நிறுவனங்களின் செயல்பாட்டு லாபம் 2 மடங்குக்கு மேல் அதிகரித்து ரூ.60,570 கோடியாக உயரும். ஒரு வாடிக்கையாளர் வாயிலான சராசரி வருவாய்  ரூ.1 அதிகரித்தால் தொலைத்தொடர்பு துறையின் செயல்பாட்டு லாபம் ரூ.1,000 கோடி அதிகரிக்கும்.  கடந்த 2018-19ம் நிதியாண்டில் ஒட்டு மொத்த அளவில் தொலைத்தொடர்பு துறை நிறுவனங்களின் செயல்பாட்டு லாபம் ரூ.29,450 கோடியாக இருந்தது என அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.