கடவுளின் நிபந்தனை!

  0
  15
  god

  கடவுள் மீது அதிக பக்தி கொண்ட ஒருவன் கடவுளை நோக்கி தவம் இருந்தான்.ஒரு நாள் கடவுள் அவனைக் காண வந்தார். 
  ‘மகனே கண்ணை திற’ என்று சொன்னார் கடவுள்.

  கடவுள் மீது அதிக பக்தி கொண்ட ஒருவன் கடவுளை நோக்கி தவம் இருந்தான்.ஒரு நாள் கடவுள் அவனைக் காண வந்தார். 
  ‘மகனே கண்ணை திற’ என்று சொன்னார் கடவுள்.
  கடவுளைக் கண்ட மகிழ்ச்சியில் அவன் துள்ளி குதித்தான். 
  ‘நான் உங்களை கண்டதே நான் செய்த பெரும் பாக்கியம். நான் தவம் இருந்த காரணத்தை கூறுகிறேன்’ என்று ஆரம்பித்தான்.
  சொல் மகனே என்றார் கடவுள்.
  இறைவா என்னிடம் வருபவர்கள், பழகுபவர்கள் அனைவரும் என்னிடம் இருந்து எதையோ ஒன்றை எதிர்பார்த்து தான் வருகிறார்கள். பழகுகிறார்கள். தேவைக்காக மட்டுமே என்னிடம் வந்து பழகுகிறார்கள். அந்தப் பழக்கமும் அந்த உறவும் எனக்கு பிடிக்கவில்லை. கடும் கோபமும் எரிச்சலும் மன உளைச்சலும் தான் வருகின்றது. ஆகவே தாங்கள் கருணையுள்ளம் கொண்டு எனக்கு ஒரு வரத்தை அளிக்க வேண்டும் என்று வேண்டி நின்றான். 
  என்ன கேள் மகனே என்றார். 

  God
  இனி என் வாழ்நாள் முழுவதும் என்னிடம் வருபவர்கள் எந்த எதிர்பார்ப்புமின்றி பழகுபவர்களாக இருக்க வேண்டும் என்றான். 
  இறைவன் மந்தகாசமாக புன்னகைத்தார். உன் ஆசை எல்லாம் சரி தான். ஆனால் நீ கேட்கும் இந்த வரத்தை தான் நானும் எனக்கு வேண்டும் என்று எதிர்பார்த்து இத்தனை வருடங்களாக காத்திருக்கிறேன். என்னிடம் வருபவர்களில் எல்லோருமே என்னிடம் ஏதேனும் ஒரு காரியம் ஆக வேண்டும் என்று மனதுள் நினைத்துக் கொண்டு தானே வருகிறார்கள்.. இவ்வளவு ஏன்.. என்னைக் குறித்து தவமிருந்த நீயும், ஏதோ ஒரு வரத்தை எதிர்பார்த்து தானே தவமிருந்தாய்? எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என்றாவது ஒரு பக்தனாவது தூய்மையான உள்ளத்துடன் வரமாட்டானா என்று நானும் காத்திருக்கிறேன். எனக்கே அப்படி நடப்பதில்லை என்று கூறி சிரித்தார். 
  மனிதன் புரிந்து கொண்டான். எதிர்பார்ப்போடு பழகுபவர்கள் மற்றவர்கள் என்று தான் நாம் நினைத்தோம். நாமும் எதிர்பார்ப்போடு தான் இருக்கிறோம் என்பதை நினைத்து வெட்கி தலைகுனிந்தான்.