கடந்த 5 வர்த்தக தினங்களில் ரூ.13 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்…. சென்செக்ஸ் 4,188 புள்ளிகள் வீழ்ச்சி

  0
  1
  பங்கு வர்த்தகம்

  இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த 5 வர்த்தக தினங்களில் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் முதலீட்டாளர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. சென்செக்ஸ் 4,188 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

  கடந்த திங்கள் முதல் வெள்ளி வரையிலான கடந்த 5 வர்த்தக தினங்களில் முதல் 4 நாட்களில் இந்திய பங்குச் சந்தைகளில் சரிவை சந்தித்தது. தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ், அதனால் உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு சரிவு போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. அதேசமயம் கொரோனா வைரஸை எதிர்க்கொள்ள உலக நாடுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள், பொருளாதாரத்தை மீட்க பல்வேறு நாடுகளின் மைய வங்கிகள் எடுத்து வரும் ஊக்குவிப்பு நடவடிக்கைகள் காரணமாக நேற்று மட்டும் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது.

  கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்

  கடந்த வெள்ளிக்கிழமை பங்கு வர்த்தகம் முடிவடைந்த பிறகு, மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.116.09 லட்சம் கோடியாக சரிந்தது. ஆக, கடந்த 5 வர்த்தக தினங்களில் முதலீட்டாளர்கள் ஒட்டு மொத்த அளவில் ரூ.13.34 லட்சம் கோடியை பங்குச் சந்தையில் இழந்தனர்.

  பங்கு வர்த்தகம் சரிவு

  கடந்த 5 வர்த்தக தினங்களில் ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 4,187.52 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 29,915.96 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 1,209.75 புள்ளிகள் இறங்கி 8,745.45 புள்ளிகளில் முடிவுற்றது.