கடந்த 2 மாதங்களாக தினமும் சராசரியாக ரூ.2,220 கோடியை இழந்த முகேஷ் அம்பானி….

  0
  1
  முகேஷ் அம்பானி

  பங்குச் சந்தையின் சரிவால் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு கடந்த 2 மாதங்களாக தினமும் சராசரியாக ரூ.2,220 கோடி குறைந்து ரூ.3.55 லட்சம் கோடியாக சரிந்துள்ளதாக ஹுருன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

  ஆய்வு நிறுவனமான ஹுருன் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதுபோல் தற்போது ஹுருன் உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் மெகா கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி 17வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். கடந்த மார்ச் இறுதி நிலவரப்படி அவரது சொத்து மதிப்பு ரூ.3.55 லட்சம் கோடியாக  (4,800 கோடி டாலர்) சரிவு கண்டுள்ளது.

  கவுதம் அதானி

  கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் பொருளாதார பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் பங்குச் சந்தை கடந்த 2 மாதத்தில் 25 சதவீதம் சரிவு கண்டது. பங்குச் சந்தையின் சரிவால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு கடந்த 2 மாதங்களாக தினமும் சராசரியாக ரூ.2,220 கோடி குறைந்துள்ளது. கடந்த பிப்ரவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.1.40 லட்சம் கோடி குறைந்துள்ளது. 

  ஷிவ் நாடார்

  முகேஷ் அம்பானியை தவிர்த்து அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார் மற்றும் கோடக் வங்கியின் உதய் கோடக் ஆகியோரின் சொத்து மதிப்பும கணிசமான அளவில் குறைந்துள்ளது. கவுதம் அதானி சொத்து மதிப்பு ரூ.44,400 கோடியும், ஷிவ் நாடார் மற்றும் உதய் கோடக் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு முறையே சுமார் ரூ.37 ஆயிரம் கோடி மற்றும் ரூ.29,600 கோடியும் குறைந்துள்ளதாக ஹுருன் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. டாப் 100 உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இந்தியர் முகேஷ் அம்பானிதான்.