கடந்த நிதியாண்டில் முதலீட்டாளர்களின் பாக்கெட்டை பதம் பார்த்த பங்கு வர்த்தகம்…. ரூ.37.59 லட்சம் கோடி நஷ்டம்….

  0
  1
  பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

  கடந்த நிதியாண்டு (2019 ஏப்ரல் – 2020 மார்ச்) பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒரு கசப்பான ஆண்டாக அமைந்தது. சென்ற நிதியாண்டில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.37.59 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

  2018-19ம் நிதியாண்டில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.8.83 லட்சம் கோடி உயர்ந்து ரூ.151.08 லட்சம் கோடியாக அதிகரித்தது. மேலும் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 8,828.8 புள்ளிகள் உயர்ந்தது. அந்த நிதியாண்டு முதலீட்டாளர்களுக்கு சிறப்பாக அமைந்தது.

  பங்கு வர்த்தகம் ஏற்றம்

  ஆனால் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த சென்ற நிதியாண்டு முதலீட்டாளர்களுக்கு பெரிய ஏமாற்றமான ஆண்டாக அமைந்தது. பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு, வாகன விற்பனை சரிவு, தொழில்துறை உற்பத்தி சரிவு போன்ற பல்வேறு காரணங்களால் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் இடை இடையே சரிவு கண்டு வந்த போதிலும், கடந்த ஜனவரி 20ம் தேதியன்று சென்செக்ஸ் புதிய உச்சத்தை (42,273.87 புள்ளிகள்) தொட்டது.

  பொருளாதாரத்தில் வீழ்ச்சி

  இனி பங்குச் சந்தைகள் தொடர்ந்து ஏற்றம் காணும் என முதலீட்டாளர்கள் நினைத்தனர். ஆனால் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாக ஆனது பங்கு வர்த்தகம். புதிய உச்சத்தை தொட்ட பங்கு வர்த்தகம் அதற்கு அடுத்த 2 மாதங்களில் சென்செக்ஸ் ஓராண்டின் குறைந்த அளவாக 25,638.9 புள்ளிகளாக (கடந்த மார்ச் 24ம் தேதியன்று)  குறைந்தது. கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் முடக்கப்பட்டது. மேலும், சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, மீண்டும் உலக பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்ற அச்சம் போன்றவற்றால் பங்கு வர்த்தகம் சரிவு கண்டது. 

  பங்கு வர்த்தகம் சரிவு

  சென்ற நிதியாண்டின் கடைசி வர்த்தக தினமான நேற்று முன்தினம் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.113.48 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, கடந்த நிதியாண்டில் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.37.59 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.