ஓபிஎஸ், இபிஎஸ் அணிக்கே இரட்டை இலை சின்னம்: தில்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

  11
  ஓபிஎஸ் இபிஎஸ் (கோப்புப்படம்)

  ஓபிஎஸ், இபிஎஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது சரியே என தில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

  புதுதில்லி: ஓபிஎஸ், இபிஎஸ் அணிக்கு   தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது சரியே என தில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

  ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக டிடிவி தினகரன் தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வந்தன. இதையடுத்து சசிகலா சிறைக்குச் சென்ற நிலையில்  பல்வேறு பேச்சுவார்த்தைக்குப் பிறகு முதல்வர்  எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர் செல்வமும் ஒன்றாக இணைந்ததையடுத்து தாங்களே உண்மையான அதிமுக என்று கூறினார்.

  இதனையடுத்து அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலைச் சின்னம் ஆகியவற்றை இபிஎஸ், ஓபிஎஸ் அணிக்குத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை எதிர்த்து டிடிவி தினகரன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜிஎஸ்.சிஸ்தானி மற்றும் சங்கீதா டிங்கிரி சேகல் ஆகியோர் அமர்வில் கடந்த ஓராண்டாக விசாரிக்கப்பட்டு வந்தது.  

  இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. அதில், ‘ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலையை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது சரியானது  என்று தில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. குறிப்பாக இந்த மனுவின் சாராம்சமானது, அதிமுகவின் அதிகப்படியான எம்எல்ஏ-க்கள் எந்த அணியில் இருக்கிறார்களோ அவர்களுக்கே இந்த சின்னம் செல்லும் என்பதை மைய கருத்தாக கொண்டு தான் இந்த வழக்கு பார்க்கப்பட்டுள்ளது. அதன்படி பார்க்கும் போது, ஓபிஎஸ், இபிஎஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் இரட்டை இலை  வழங்கியது செல்லும் என்றும்  சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியாகத் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது.

  இதையடுத்து  முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பொன்னாடை போர்த்தி, இனிப்பு வழங்கி அதிமுக நிர்வாகிகள் வாழ்த்து கூறி வருகின்றனர்.