ஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே!

  0
  2
  Saravanan

  ஆயிரத்திற்கு மேற்பட்ட பல்வகை மரங்கள், மாங்குயில், மயில், கொண்டாலத்தி, புறாக்கள், மேலும் பாம்பு உள்ளிட்ட வன‌விலங்குகளும் ஆதார் தேவைப்படாமல் ஆனந்தமாய் இவ்வனத்தில் குடியிருக்கின்றன.

  புதுச்சேரி அருகே பூத்துறை கிராமத்தில் வெற்று நிலமாகக் கிடந்த 100 ஏக்கர் நிலத்தை சரவணன் என்ற இயற்கை ஆர்வலரிடம் 1989ஆம் ஆண்டு ஒப்படைக்கிறது ஆரோவில் நிர்வாகம். இந்த சரவணன் அரசியல்வாதிகளின் நட்பில் இருந்திருந்தால், ஆரோவில் நிர்வாகத்திடமிருந்து இடத்தை ஆட்டையப்போட்டு, மனைபோட்டு ‘ஆரோவில்லுக்கு வெகு அருகில்’ என விளம்பரம் செய்திருப்பார். சரவணன் கல்வித்தந்தையர்களோடு பழக்கத்தில் இருந்திருந்தால், 50 ஏக்கரில் கல்லூரி, 50 ஏக்கரில் இன்டர்நேஷனல் பள்ளி என கல்லா கட்டியிருப்பார். ஆனால், இந்த சரவணனுக்கு அவர்களோடு எல்லாம் பழக்கம் இல்லை. அவர் பழகியது இயற்கையோடு, மரங்களோடு.

  Aranya Forest field visit

  இந்த 30 வருடங்களில் நூறு ஏக்கர் நிலம் முழுமைக்கும் உலர் வெப்ப மண்டல காட்டையே உருவாக்கியிருக்கிறார். சரவணன் மற்றும் அவரின் குடும்பத்தினரின் உழைப்பின் பலனாக தற்போது பச்சை போர்வை போர்த்தியது போல பரந்து விரிந்து காட்சியளிக்கும் இந்த வனத்திற்கு ஆரண்யா வனம் என்று பெயர். மரம் இருந்தால் பறவையினம் கூடுகட்டும். பறவையினம் வந்தால் அவற்றின் இன்னிசை கச்சேரி இருக்கும். பறவைகள் மட்டுமா? ஆயிரத்திற்கு மேற்பட்ட பல்வகை மரங்கள், மாங்குயில், மயில், கொண்டாலத்தி, புறாக்கள், மேலும் பாம்பு உள்ளிட்ட வன‌விலங்குகளும் ஆதார் தேவைப்படாமல் ஆனந்தமாய் இவ்வனத்தில் குடியிருக்கின்றன. சுற்றுவட்டாரங்களில் இருக்கும் பள்ளிகளில் செயல்படும் தேசிய பசுமைப்படை மாணவர்கள் வந்து அனுபவ கல்வி பெறும் அளவுக்கு ஆரண்யாவுக்கு சிறப்பு சேர்த்திருக்கும் சரவணனுக்கே எல்லாப் புகழும்.