ஒரு மாதிரி 4 மாதத்துக்கு பிறகு டெல்லி காங்கிரசுக்கு புது தலைவர் கிடைச்சாச்சு!

  0
  1
  சுபாஷ் சோப்ரா

  டெல்லி மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுபாஷ் சோப்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  டெல்லி மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த ஷீலா தீட்சித் கடந்த ஜூலை 20ம் தேதி காலமானார். இதனையடுத்து அம்மாநில காங்கிரஸ் பதவி காலியாகவே இருந்தது. புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதை காங்கிரஸ் தலைமை தாமதப்படுத்தி வந்தது. இதற்கிடையே ஹரோன் யூசுப், தேவேந்திர யாதவ் மற்றும் ராஜேஷ் லிலோதியா ஆகிய பேரை செயல் தலைவர்களாக நியமித்து அவர்கள் மூலம் கடந்த 2 மாதங்களாக டெல்லி காங்கிரஸ் இயக்கப்பட்டு வந்தது.

  ஷீலா தீட்சித்

  இந்த சூழ்நிலையில், 2020 பிப்ரவரியில் டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ளதால் இதற்கு மேலும் டெல்லி மாநில காங்கிரசுக்கு தலைவரை நியமனம் செய்யவில்லை என்றாலும் சிக்கல் என்பதை உணர்ந்த காங்கிரஸ் தலைமை புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதில் தீவிரம் காட்டியது. காங்கிரஸ் கட்சி தலைவர் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக டெல்லி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின் இறுதியாக டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சுபாஷ் சோப்ராவை சோனியா காந்தி தேர்வு செய்தார். 

  சோனியா காந்தி

  டெல்லி மாநில காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 72 வயதான சுபாஷ் சோப்ரா,1998ல் முதல் முறையாக டெல்லி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கல்காஜி தொகுதியிலிருந்து 3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1998 முதல் 2003ம் ஆண்டு வரை டெல்லி மாநில காங்கிரஸ் தலைவராகவும் சுபாஷ் சோப்ரா பணிபுரிந்துள்ளார்.