ஒரு நாளைக்கு ரூ.200 சம்பாதிக்கிறேன். அது போதும் எனக்கு – ரூ.1 இட்லி கமலத்தாள் பாட்டி

  19
  கமலத்தாள் பாட்டி

  கோடீஸ்வரியாக மாற வேண்டும் என நினைத்தால் பல ஆண்டுகளுக்கு முன்பே மாறி இருப்பேன். ஒரு நாளைக்கு ரூ.200 சம்பாதிக்கிறேன் அது போதும் என்னுடைய சின்ன வாழ்வாதாரத்துக்கு என ரூ.1 இட்லி கமலத்தாள் பாட்டி தெரிவித்தார்.

  கோவை மாட்டம் ஆலாந்துறை-வடிவேலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கமலாத்தாள் பாட்டி. 85 வயதிலும் இட்லி வியாபாரம் செய்து வருகிறார். அதுவும் ஒரு ரூபாய்க்கு இட்லியை விற்பனை செய்து வருகிறார். கடந்த மாதம் வரை அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பிரபலமாக இருந்த கமலத்தாள் பாட்டி. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓரே நாளில் இணையத்தில் டிரெண்டானார்.

  உணவு பரிமாறும் கமலத்தாள் பாட்டி

  பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா டிவிட்டரில், கமலத்தாள் பாட்டி ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வருவது குறித்து பெருமையாக குறிப்பிட்டார். மேலும் அவரது தொழிலில் முதலீடு செய்ய இருப்பதாகவும், அதற்காக எல்.பி.ஜி. இணைப்பு வழங்க உள்ளதாகவும் கூறினார். இதனையடுத்து உலக முழுவதும் கமலாத்தாள் பாட்டி பிரபலமானார்.

  கமலாத்தாள் பாட்டி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த 20 ஆண்டுகளாக இட்லி வியாபாரம்  செய்து வருகிறேன். மேலும் இது எவ்வளவு நாளைக்கு ஒடும் என்று எனக்கு தெரியாது. என்னுடைய குடும்பத்தில் யாரும் கிடையாது. நான் மட்டுமே தனியாக இருக்கிறேன். நான் தினந்தோறும் ரூ.200 சம்பாதிக்கிறேன். இந்த விலைக்கு இட்லி விற்பனை செய்து அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை.

  கமலத்தாள் பாட்டி

  நான் கோடீஸ்வரியாக ஆக வேண்டும் என்று நினைத்திருந்தால் பல ஆண்டுகளுக்கு முன்பே ஆகியிருப்பேன். ஆனால் நான் என்னுடைய சிறிய வாழ்வாதரத்துக்கு போதுமான பணத்தை மட்டும் சம்பாதித்தால் போதும் என்று முடிவு செய்தேன். என்னிடம் வரும் மக்களுக்கு சூடான இட்லியை வழங்கும் போது மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  கடந்த 20 ஆண்டுகளாக விறகு அடுப்பில் சமையல் செய்து வந்த கமலத்தாள் பாட்டி, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் கியாஸ் இணைப்பு வழங்கியதையடுத்து  தற்போது கியாஸ் அடுப்பில் சமையல் செய்து வருகிறார்.