எப்படியும் ஜெயிச்சு விடுவோம் என்ற நம்பிக்கையில் 5 ஆயிரம் லட்டு, மாலைகளுக்கு ஆர்டர்! ஆட்டத்தை ஆரம்பித்த பா.ஜ.க.

  0
  4
  மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல்

  இன்று தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், எப்படியும் ஜெயிச்சு விடுவோம் என்ற நம்பிக்கையில் 5 ஆயிரம் லட்டு மற்றும் ஏராளமான மாலைகளுக்கு மகாராஷ்டிரா பா.ஜ.க.வினர் ஆர்டர் செய்துள்ளனர்.

  மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் கடந்த 21ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜ.க.- சிவ சேனா கட்சிகள் ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒரு கூட்டணியாகவும் தேர்தல் களத்தை சந்தித்தன. கடந்த திங்கட்கிழமையன்று நடந்த தேர்தல் வாக்குப்பதிவில் சுமார் 61 சதவீத வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்து இருந்தனர். வாக்குப்பதிவு பிந்தைய கருத்து கணிப்புகள், அந்த மாநிலத்தில் பா.ஜ.க.-சிவ சேனா கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் என அடித்து கூறுகின்றன.

  மகாராஷ்டிரா பா.ஜ.க.வினர்

  இந்நிலையில் கடந்த 21ம் தேதி பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. மேலும் இன்று மதியத்துக்குள் தேர்தல் முடிவுகள் தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை கட்டாயம் வெற்றி பெறுவோம் என பா.ஜ.க.வினர் உறுதியான நம்பிக்கையில் உள்ளனர். இதனால் தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் வெற்றியை கொண்டாடுவதற்காக தடபுடலான ஏற்பாடுகளை அம்மாநில பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்துள்ளனர். 

  லட்டு

  மகிழ்ச்சியை இனிப்பு வழங்கி கொண்டாடுவதற்காக ஏற்கனவே 5 ஆயிரம் லட்டுகளை ஆர்டர் செய்துள்ளனர். மேலும் தலைவர்களுக்கு மாலை போடுவதற்காக ஏராளமான மாலைகளுக்கும் ஏற்பாடு செய்து விட்டனர். இதுதவிர மும்பையில் பா.ஜ.க.அலுவலகங்களில் தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்வதற்காக பெரிய திரைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகுவதை முன்னிட்டு அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று உத்தரகாண்டில் உள்ள கேதர்நாத் கோயில் சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.