என்னது நீலகிரியில் இப்படி ஒரு சட்டமா? மற்ற மாவட்டங்களுக்கும் சீக்கிரம் ஆப்பு இருக்கு!!

  0
  4
  நீலகிரி

  நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் இனி ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

  நீலகிரி மாவட்டத்தின் மாவட்ட நிர்வாகக்குழு அங்குள்ள சுற்றுச்சூழலை மென்மேலும் மேம்படுத்தவும் இயற்கை வளங்களையும் சுகாதாரத்தையும் பேணிக் காக்கவும் பல திட்டங்களை வகுத்து அதனை ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறது. 

  nilgiri

  இந்த ஆண்டு ஜனவரி முதல் தமிழகம் முழுவதும் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. மேலும் விதிகளை மீறி அவற்றை பயன்படுத்துவோருக்கு கடுமையான அபராதமும் விதிக்கப்பட்டது. இதே விதிமுறை நீலகிரி மாவட்டத்திலும் நடப்பில் கொண்டுவரப்பட்டது. 

  அதைத்தொடர்ந்து பிளாஸ்டிக் பாட்டிலில் வெளிவந்து கொண்டிருக்கும் தண்ணீர் மற்றும் குளிர்பானங்களை தடை செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவானது செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் நீலகிரி மாவட்ட நிர்வாக குழுவினால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பானது இம்மாதம் துவக்கத்தில் கூறியதைப் போலவே நடைமுறைப்படுத்தப்பட்டது. 

  nilgiri

  திடீரென தண்ணீர் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் அன்றாடம் மக்கள் அவதிப்படாமல் இருக்க 70க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் ஏடிஎம் எந்திரங்கள் பொருத்தப்பட்டு பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளுமாறு வசதி செய்யப்பட்டது. ஐந்து ரூபாய் செலுத்தினால் ஒரு லிட்டர் வரை தண்ணீரை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் மக்கள் இதற்காக பாத்திரங்களை கொண்டுவர வேண்டுமென கூறப்பட்டிருந்தது. 

  இதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு பொதுக் கூட்டமொன்று நடத்தப்பட்டது. இந்த பொதுக் கூட்டத்தின் முடிவில் பொது இடங்களில் எச்சில் துப்புவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த விதிமுறை உடனடியாக அமலுக்கு வரும் எனவும் கூறப்பட்டது.

  collector

  இதுகுறித்து பேசிய நீலகிரி மாவட்ட ஆட்சியர் திவ்யா பேசுகையில், பொதுமக்களில் சிலர் புகையிலை, பான்மசாலா, குட்கா ஆகியவற்றை மென்று மக்கள் நடமாடும் பொது இடங்களிலேயே துப்பி அசுத்தம் செய்கின்றனர். நாம் செய்த இந்த இழி செயலுக்கு துப்புரவு தொழிலாளர்கள் சுத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் பொது இடங்கள் தொடர்ந்து அசுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. இதனை தடுக்க உரிய நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

  அதாவது இனி பொது இடங்களில் எச்சில் துப்பினால் ஆயிரம் ரூபாய் அபராதம் உரிய நபரிடம் வசூலிக்கப்படும். இதனை கண்காணிக்கவும் அபராதத்தை வசூலிக்கவும் உள்ளாட்சி அமைப்பினர் செயல்படுவர் என தெரிவித்தார். 

  இந்த விதிமுறை இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் பொருந்தும் அவர்களிடமும் இந்த அபராதம் விதிக்கப்படும் எனவும் அதிரடியாக தெரிவித்தார்.

   இதற்கு பல சுற்றுபுற ஆர்வலர்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவதோடு நீலகிரி போன்ற மலைப் பிரதேசங்கள் அனைத்திலும் இது போன்ற விதிமுறை விதிக்கப்பட வேண்டும்; அப்பொழுதுதான் சுற்றுச்சூழல் மென்மேலும் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.