எனக்கு அவசியம் இல்லாத போதும் வழங்கப்பட்டது…. எஸ்.பி.ஜி. பாதுகாப்பு குறித்து மனம் திறந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன்…..

  0
  4
  நீராஜ் சேகர்

  எனக்கு அவசியல் இல்லாத போதும் எஸ்.பி.ஜி. பாதுகாப்பு வழங்கப்பட்டது. எஸ்.பி.ஜி. பாதுகாப்பில் நீங்கள் இருந்தால் நாட்டின் பிரதமர் போல் உணர்வீர்கள் என முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகனும், பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினருமான நீராஜ் சேகர் தெரிவித்தார்.

  நாடாளுமன்ற மாநிலங்களவையில் எஸ்.பி.ஜி. (திருத்த) மசோதா 2019 நேற்று நிறைவேற்றப்பட்டது. அதற்கு முன்னதாக இந்த மசோதா தொடர்பான விவாதத்தின் போது, அதனை ஆதரித்து முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகனும், பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினருமான நீராஜ் சேகர் பேசியதாவது: எஸ்.பி.ஜி. சட்டத்தில் 1991ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டதால், எனக்கு அவசியம் இல்லாத போதும் எஸ்.பி.ஜி. பாதுகாப்பு வழங்கப்பட்டது. நான் அப்போது 22 வயது இளைஞன் மற்றும் என் நிழலாக பாதுகாப்பு இருப்பது எனக்கு பிடித்து இருந்தது. நான் எப்போதும் விமான நிலையத்துக்கு சென்றாலும் எனது கார் அதுவும் புல்லட் புரூப் கார் விமானம வரை செல்லும். நான் எங்கு சென்றாலும் அதனை பயன்படுத்துவேன்.

  முன்னாள் பிரதமர் சந்திர சேகர்

  நான் ஒன்றுமில்லை ஆனாலும் எனக்கு எஸ்.பி.ஜி. பாதுகாப்பு இருப்பதை பார்த்து நான் முக்கியமான நபர் என நினைத்து என்னிடம் பலர் ஆட்டோகிராப் வாங்க வருவர். விமான நிலையங்களில் மூத்த குடிமக்கள் வரிசையில் நிற்கையில், நான் எந்தவித பாதுகாப்பு சோதனைகளும் இன்றி செல்வேன். விமானத்தில் நான் பயணம் செய்கையில் எனக்கு பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய பாதுகாவலரும் வருவார்.

  எஸ்.பி.ஜி. பாதுகாப்பு

  தமிழக தி.மு.க. அரசை என் அப்பா கலைத்த நேரத்தில் நான் சென்னைக்கு சென்று இருந்தேன். நான் அங்கு இறங்கிய போது எனக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை என் வாழ்க்கையில் இதுவரை நான் பார்த்தது இல்லை.  எனது பாதுகாப்புக்கு 10 முதல் 15 வாகனங்கள் இருந்தன. அங்கு தங்கியிருந்தபோது நான் பிரதமர் போல் உணர்ந்தேன். சில சமயங்களில் இதற்காக செலவழிக்கும் தொகையை பற்றி நான் ஆச்சரியப்படுவேன். நான் என் அம்மா மற்றும் மூத்த சகோதரருடன் சேர்ந்து பயணிக்கும்போது எங்களுடன் கார் ஊர்வலம் வருவது போல் இருக்கும். எங்களை சுற்றி 9 வாகனங்கள் வரும். இதுதவிர டெல்லி போலீசின் 15 வாகனங்களும் எங்கள் வாகனங்களை பின்தொடரும்.

  எஸ்.பி.ஜி. பாதுகாப்பு

  நீங்கள் எங்கு சென்றாலும் அங்கு அதற்கு முன்பாக சிறப்பு கார்கள் மற்றும் முன்கூட்டியே பாதுகாப்பு அனுப்பப்படும். இது போன்ற பாதுகாப்பு தேவைப்படாத என்னை போன்ற நபர்களுக்கு இந்த மசோதா அவசியம் என நினைக்கிறேன். முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்களுக்கு வேறு பிரிவு பாதுகாப்பு வழங்கலாம். மேலும் இன்றைய இளைஞர்கள் இது போன்ற வி.ஐ.பி. கலாச்சாரத்தை விரும்புவதில்லை. முன்னாள் பிரதமர்கள் வி.பி. சிங், ஐ.கே. குஜ்ரால், தேவகவுடா மற்றும் மன்மோகன் சிங் ஆகியோருக்கும் வழங்கப்பட்ட எஸ்.பி.ஜி. பாதுகாப்பு திரும்பப்பெறப்பட்டுள்ளது. ஆனால் அது குறித்து யாரும் (காங்கிரஸ்) யாயை திறக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.