எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளை கண்டு கொள்ளாத பா.ஜ.க.! மக்களவையில் குடியுரிமை மசோதா மீது இன்று வாக்கெடுப்பு!

  14
  பிரதமர் மோடி

  எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தாலும், குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றுவதில் பா.ஜ.க. உறுதியாக உள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் இன்று குடியுரிமை திருத்த மசோதா மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

  குடியுரிமை திருத்த மசோதாவின்படி, கடந்த 2014 டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்படமாட்டார்கள். அவர்கள் இந்தியாவில் குடியேறி 5 ஆண்டுகள் முடிந்தவுடன் இந்திய குடியுரிமை வழங்கப்படும். 

  குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு

  அதேசமயம் முஸ்லிம்களை வெளிப்படையாக விலக்குவதற்கான மதம் ஒரு அளவுகோல் என குடியுரிமை திருத்த மசோதாவுக்கு மதசார்ப்பற்ற எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. 

  நாடாளுமன்ற மக்களவை

  நாடாளுமன்ற மக்களவையில் இன்று குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய அரசு இன்று தாக்கல் செய்ய உள்ளது. மேலும் இன்றே அந்த மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு அதன் தொடர்ச்சியாக அதனை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பையும் முடித்து விடுவதில் பா.ஜ.க. தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது. மக்களவையில் பா.ஜ.க. அரசுக்கு பெரும்பான்மை பலம் உள்ளதால் இந்த மசோதா நிறைவேறுவதில் எந்தவித சிக்கலும் இருக்காது என தெரிகிறது.