எட்டு மணி நேர வேலை… நான்கு மணி நேர படிப்பு… ஐ.ஏ.எஸ் தேர்வில் சாதித்த கர்நாடக பஸ் கண்டக்டர்!

  0
  5
  madhu

  கர்நாடக அரசு பஸ்ஸில் நடத்துனராக பணியாற்றிக் கொண்டே யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்ற மது, கலெக்டர் ஆக வேண்டும் என்று பலரும் பிரார்த்தித்து வருகின்றனர்.

  கர்நாடக அரசு பஸ்ஸில் நடத்துனராக பணியாற்றிக் கொண்டே யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்ற மது, கலெக்டர் ஆக வேண்டும் என்று பலரும் பிரார்த்தித்து வருகின்றனர். கர்நாடக மாநில அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக பணியாற்றி வருபவர் மது. இவர் தன்னுடைய வேலை நேரம் போக தினமும் ஐந்து மணி நேரம் போட்டித் தேர்வுக்காக தன்னைத் தயார்ப்படுத்தி வந்துள்ளார். 2018ம் ஆண்டு யு.பி.எஸ்.சி தேர்வு எழுதித் தோல்வியடைந்த இவர், இந்த ஆண்டு வெற்றி பெற வேண்டும் என்று மிகத் தீவிரமாக படித்துவந்தார்.

  madhu

  2019ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து நடந்த மெயின் தேர்விலும் வெற்றிபெற்றுள்ளார். தற்போது நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதில் தேர்ச்சி பெற்றால்  ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரியாக அவர் வரலாம். 

  இது குறித்து மது கூறுகையில், “எங்கள் குடும்பத்தில் கல்லூரி படிப்பு வரை சென்ற முதல் நபர் நான்தான். என் அண்ணன், அண்ணி எல்லோரும் படிக்காதவர்கள்தான். தினமும் காலை 4 மணிக்கு எல்லாம் எழுந்து படிக்க ஆரம்பிப்பேன். பிறகு எட்டு மணி நேர நடத்துனர் பணி. அங்கும் முடிந்த நேரம் படிப்பேன். மார்ச் மாதம் 25ம் தேதி நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளேன். இதில் எப்படிப் பங்கேற்க வேண்டும் என்று போக்குவரத்து மேலாண் இயக்குநர் ஷிகா ஐ.ஏ.எஸ் உள்ளிட்டவர்கள் எனக்கு ஊக்கம் அளித்து வருகின்றனர். அவர்கள் வழிகாட்டுதல் படி செயல்பட்டு நானும் ஐ.ஏ.எஸ் அதிகாரியாவேன்” என்றார்.

  madhu

  கர்நாடக பஸ்  கண்டக்டராக பணியாற்றி நடிகர் ரஜினிகாந்த் உழைப்பால் உயர்ந்து சூப்பர் ஸ்டார் ஆனார். அதைப்போல மதுவும் கலெக்டராக வர வேண்டும் என்று அவருடன் பணியாற்றும் சக ஊழியர்கள், நண்பர்கள், கன்னட மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.