எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணி தற்போது எப்படி இருக்கிறார்?

  0
  3
  pregnant women

  எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் தற்போதைய உடல்நிலை குறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் பொறுப்பு முதல்வர் சண்முகசுந்தரம் பேட்டியளித்துள்ளார்.

  விருதுநகர்: எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் தற்போதைய உடல்நிலை குறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் பொறுப்பு முதல்வர் சண்முகசுந்தரம் பேட்டியளித்துள்ளார். 

  விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு மருத்துவமனையில் 8 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர், மருத்துவ சிகிச்சைக்காக நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அப்பெண்ணின் உடலில் சிவப்பு அணுக்கள் குறைவாக இருப்பதாகவும், உடனே ரத்தம் ஏற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளனர். 

  அதனையடுத்து, அருகில் உள்ள ஒரு ரத்த வங்கியில் இளைஞர் ஒருவர் தானமாக கொடுத்த ரத்தத்தை, பரிசோதித்துப் பார்க்காமல் கர்ப்பிணிப் பெண்ணின் உடலில் மருத்துவமனை ஊழியர்கள் ஏற்றியுள்ளனர். 

  இதற்கிடையே, ரத்தத்தைத் தானமாக வழங்கிய அந்த இளைஞர், தன் உடலில் எச்ஐவி நோய் தொற்று இருப்பதாகவும், தான் வழங்கிய ரத்தத்தை யாருக்கும் ஏற்றிவிட வேண்டாம் என்றும் தன் ரத்தத்தை தானமாக வழங்கிய மையத்தைத் தொடர்பு கொண்டு எச்சரித்துள்ளார்.

  ஆனால், ஊழியர்களின் அலட்சியத்தால் 8 மாத கர்ப்பிணிக்கு அந்த இளைஞர் வழங்கிய ரத்தம் ஏற்றப்பட்டது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும், உயர்தர சிகிச்சை வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் உறுதியளித்தனர். 

  ஆனால், ஏற்கனவே உடல் நலிவுற்று இருந்த அந்த கர்ப்பிணிக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்ததாகவும், அப்பெண்ணுக்கு மஞ்சல் காமாலை நோய் ஏற்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியது.

  இந்நிலையில், அப்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் பொறுப்பு முதல்வர் சண்முகசுந்தரம் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சிகிச்சைக்குப் பின் அந்தப் பெண்ணுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இருப்பதாகவும், பிரசவ நேரத்தில் தாயிடம் இருந்து குழந்தைக்கு எச்ஐவி தொற்று ஏற்படும் என்பதால், அதற்கான தடுப்பு மருந்துகள் 45நாட்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும்  என்றும் தெரிவித்தார்.