எங்க உள்விவகாரங்கள் குறித்து யாரிடமும் கருத்து கேட்கவில்லை! சீனாவுக்கு பதிலடி கொடுத்த இந்தியா

  0
  3
  முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

  காஷ்மீர் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த சீனாவுக்கு, எங்க உள்நாட்டு விவகாரங்கள் குறித்து யாரிடமும் கருத்து கேட்கவில்லை என இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

  ஜம்மு அண்டு காஷ்மீர் மாநிலம் நேற்று முதல் ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக உதயமாகியது. இது குறித்து சீன வெளியுறவு துறை அமைச்சகம் கூறுகையில், இந்திய அரசு ஒரு தலைப்பட்சமாக தனது உள்நாட்டு சட்டங்களையும், நிர்வாக பகுதிகளையும் மாற்றுவது சீனாவின் இறையாண்மைக்கு சவால் விடுவது போல் உள்ளது என தெரிவித்தது. இதற்கு இந்தியா உடனடியாக பதிலடி கொடுத்தது.

  ரவீஷ் குமார்

  இந்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் இது குறித்து கூறியதாவது: இந்த பிரச்னையில் இந்தியாவின் நிலையான மற்றும் தெளிவான நிலைப்பாடு குறித்து சீனாவுக்கு தெரியும். ஜம்மு அண்டு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக மறுசீரமைப்பு செய்தது முழுக்க முழுக்க இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்.

  சீனா

  எங்களது உள்நாட்டு விவகாரங்கள் குறித்து சீனா உள்ளிட்ட எந்த நாடுகளிடம் நாங்கள் கருத்து கேட்கவில்லை. இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை மற்ற நாடுகள் மதிக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் சீனா பெரிய அளவில் ஆக்கிரமிப்பு செய்து வருகிறது. சீனா-பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தம் 1963ன் கீழ், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்து இந்திய யூனியன் பிரதேசங்களை சட்டத்துக்கு புறம்பாக ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.