ஊரடங்கால் சுத்தமாகும் கங்கை! – சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி

  0
  1
  Health of river Ganges improves

  ஊரடங்கு காரணமாக தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், கங்கை நதி சுத்தமாகி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

  ஊரடங்கு உத்தரவால் மக்கள் பாதிக்கப்பட்டாலும் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய நன்மை கிடைத்துள்ளதாக செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. சென்னை, டெல்லி உள்ளிட்ட பெருநகரங்களில் காற்று மாசு குறைந்துள்ளது. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் குறைந்துள்ளன. இதனால், கங்கை ஆறும் தூய்மை அடைந்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

  மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு கங்கை நதியில் மக்கள் நீராடுவது, மாசு படுத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது கங்கை நதியின் பல்வேறு இடங்களில் இருந்து நீரை எடுத்து உத்தரப்பிரதேச மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அதில் ஆச்சரியப்படத்தக்க வகையில் அதன் ஆரோக்கியம் மேம்பட்டதாகத் தெரியவந்துள்ளது. தற்போதும் கூட அது குடிக்கும் அளவுக்கு சுத்தமாகவில்லை, குறைந்தபட்சம் குளிக்கும் அளவுக்கு சுத்தமாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றன. 

  மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இந்த புள்ளிவிவரங்கள், ஆய்வு முடிவுகளை வெளியிட வேண்டும். ஊரடங்கு முடியும்போது கங்கை நதி எந்த அளவுக்கு தூய்மையாக உள்ளது என்பதைக் குறிக்க வேண்டும். இதன் மூலம் தொழிற்சாலைகள் எந்த அளவுக்கு கங்கையை மாசுபடுத்துகின்றன என்பதை உறுதி செய்யலாம். இதன் அடிப்படையில் எதிர்கால திட்டமிடல், கழிவுநீர் மேலாண்மையை மேற்கொள்ளலாம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். கங்கை இப்படியே சுத்தமாக இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், கழிவுநீர் கலப்பதைத் தடுக்க தொழிற்சாலைகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.