உலகத்திலேயே நம் நாட்டுலதாங்க மொபைல் டேட்டா கட்டணம் குறைவு.. தனியார் மொபைல் நிறுவனங்களின கட்டண உயர்வுக்கு சொம்பு தூக்கும் பா.ஜ.க. அமைச்சர்….

  0
  6
  ரவி சங்கர் பிரசாத்

  உலகத்திலேயே நம் நாட்டுலதாங்க மொபைல் டேட்டா கட்டணம் குறைவு என ஏர்டெல் உள்ளிட்ட தனியார் மொபைல் நிறுவனங்கள் கட்டண உயர்வு நடவடிக்கைக்கு ஆதரவாக மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார்.

  முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் நம் நாட்டு தொலைத்தொடர்பு துறையில் காலடி வைத்த பிறகு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. ஜியோ நிறுவனம் அதிரடி சலுகைகளை வழங்கி குறுகிய காலத்திலேயே கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை பெற்றது. ஜியோவை சமாளிக்க முடியாமல் பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் காணாமல் போய் விட்டன. ஏர்டெல், வோடாபோன் ஐடியா மற்றும் பி.எஸ்.என்.எல். ஆகிய நிறுவனங்கள்  மட்டுமே தாக்குப்பிடித்து நின்றன.

  தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள்

  மேலும் ஏர்டெல், வோடாபோன் ஐடியா நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்வதற்காக கட்டண குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதனால் அந்நிறுவனங்களின் வருவாய் கடுமையாக பாதித்தது. ஒரு கட்டத்தில் கட்டணத்தை உயர்த்தினால் மட்டுமே நிறுவனத்தை நடத்த முடியும் என்பதை உணர்ந்த ஏர்டெல்,வோடாபோன் மற்றும் ஜியோ நிறுவனங்கள் கால் மற்றும் டேட்டாவுக்கான கட்டணத்தை அதிரடியாக உயர்த்தின. 

  பிரியங்கா காந்தி

  தனியார் மொபைல் நிறுவனங்களின் கட்டண உயர்வை குறிப்பிட்டு மத்திய அரசை காங்கிரசின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.  தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்த பா.ஜ.க. அனுமதி அளித்துவிட்டு, அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்களை மோசமாக்கி விட்டது. என டிவிட்டரில் குற்றச்சாட்டி இருந்தார்.

  டிராய்

  இந்நிலையில் தனியார் மொபைல் நிறுவனங்களின் கட்டண உயர்வுக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். டிவிட்டரில் அவர், உலகத்திலேயே இந்திய மொபைல் போன் வாடிக்கையாளர்கள்தான் இன்னும் குறைந்த செலவில் டேட்டாவை பயன்படுத்துகின்றனர். டிராயின் அறிக்கையின்படி, 2014ல் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது 1 ஜி.பி. டேட்டா ரூ.268.97ஆக இருந்தது. ஆனால் தற்போது 1 ஜி.பி. டேட்டா ரூ.11.78க்கு கிடைக்கிறது என பதிவு செய்து இருந்தார்.