இலங்கை இந்துக்களை ஏன் அனுமதிக்கக் கூடாது? – ப.சிதம்பரம் கேள்வி

  0
  4
  P Chidambaram

  இந்திய அரசியலமைப்புப் படி குடியுரிமை என்பது மண்ணைச் சார்ந்ததே தவிர மதம் சார்ந்தது இல்லை… இலங்கையில் இருந்து வரும் இந்துக்களை ஏன் அனுமதிக்கக் கூடாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
  சென்னையில் உள்ள கேரள சமாஜ் அரங்கில் அரசியலமைப்பைக் காப்போம், ஜனநாயகத்தைக் காப்போம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதில், முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவருமான ப.சிதம்பரம் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

  chidambaram.jpg

  “தற்போது நடந்துவரும் போராட்டம் இஸ்லாமிய மக்களுக்கும் இந்திய அரசுக்கும் இடையே நடப்பது இல்லை. அரசியலமைப்பைக் காக்க வேண்டும் என்பதற்காக இந்திய மக்களுக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் இடையே நடப்பதாகும்.அஸ்ஸாமில் என்.பி.ஆர் அமல்படுத்தப்பட்டதன் மூலம் 19 லட்சம் பேரை வெளியேற்றும் நிலை ஏற்பட்டது. இதில், 12 லட்சம் பேர் இந்துக்கள்… 7 லட்சம் பேர் இஸ்லாமியர்கள் என்று தெரிந்தபிறகு மத்திய அரசுக்கு திண்டாட்டம். உலகில் எந்த ஒரு நாடும் 19 லட்சம் பேரை நாட்டைவிட்டு வெளியேற்றியது இல்லை.வேண்டுமானால், இந்திய வரும் டிரம்பிடம் மோடி கேட்டு தெரிந்துகொள்ளட்டும். அமெரிக்காவுக்கு வந்த எந்த ஒரு மெக்சிகோ நாட்டவரையும் டிரம்பால் வெளியேற்ற முடியவில்லை.
  குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் யாருக்கும்; பாதிப்பில்லை என்பது பொய். தவறு செய்தால் திருத்திக்கொள்ளலாம், ஆனால் பொய்யை மீண்டும் மீண்டும் கூறினால் என்ன செய்வது. இந்திய அரசியலமைப்பு குடியுரிமை என்பதை மண்ணின் அடிப்படையாக குறிப்பிடுகிறதே தவிர மதம் சார்ந்ததாக குறிப்பிடவில்லை. அது ஜனநாயக நாட்டின் குடிமக்கள் ஏற்றுக்கொண்ட ஒன்று. நமக்கு அண்டை நாடுகள் மூன்றுதானா? ஏன் இலங்கை, சீனா, பூடான், மியான்மர் கண்ணுக்குத் தெரியவில்லையா? இந்துக்களை அனுமதிக்கும் நீங்கள் ஏன் இலங்கை இந்துக்களை அனுமதிக்கக் கூடாது. மதத்தின் அடிப்படையில் மட்டுமா துன்புறுத்தல் உள்ளது… மொழி, இனம் அடிப்படையில் துன்புறுத்தல் நடைபெறவில்லையா? ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க பல விஷக்கருத்துக்களை பரப்பி வருகின்றன” என்றார்.