இறுதி கட்டத்தை நெருங்கிய மத்திய பிரதேச அரசியல் விளையாட்டு…. இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு…. உச்ச நீதிமன்றம் உத்தரவு…..

  0
  1
  முதல்வர் கமல் நாத்

  மத்திய பிரதேச சட்டப்பேரவையில் மார்ச் 20ம் தேதி (இன்று) கமல் நாத் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  மத்திய பிரதேசத்தின் காங்கிரஸ் கட்சியின் பிம்பமாக விளங்கிய ஜோதிராதித்ய சிந்தியா கடந்த வாரம் யாரும் எதிர்பாராத வண்ணம் பா.ஜ.க.வில் இணைந்தார். மேலும் சிந்தியாவின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து முதல்வர் கமல் நாத் தலைமையிலான அரசு பெரும்பான்மை இழந்து கவிழும் சூழல் ஏற்பட்டது.

  மத்திய பிரதேச காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்

  இது போன்ற சூழலை எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்த பா.ஜ.க., முதல்வர் கமல் நாத் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என வலியுறுத்தியது. மேலும் அம்மாநில கவர்னர் லால்ஜி டான்டனும் சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிருபிக்கும்படி முதல்வர் கமல் நாத்துக்கு உத்தரவிட்டார். ஆனால் கடந்த திங்கட்கிழமையன்று கொரோனா வைரஸை காரணம் காட்டி இம்மாதம் 26ம் தேதி வரை சட்டப்பேரவையை சபாநாயகர் ஒத்திவைத்தார்.

  உச்ச நீதிமன்றம்

  உடனே பா.ஜ.க., அடுத்த 12 மணி நேரத்துக்குள் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கமல் நாத் அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. கடந்த சில நாட்களாக இந்த வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. மார்ச் 20ம் தேதி (நாளை) மத்திய பிரதேச சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். சட்டத்தின்படி கைகளை காண்பிப்பதன் மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை முடிக்க வேண்டும் என மத்திய பிரதேச சட்டப்பேரவைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.