இப்படியாகி விட்டதே நிலைமை..? டி.டி.வி.தினகரனால் தலையில் அடித்துக் கொள்ளும் ஓ.பி.எஸ்- எடப்பாடி..

  5
  liyana

  சி.ஏ.ஜி. அறிக்கை வெளியானாலும் ஆனது, தமிழக அரசை எதிர்க்கட்சிகள் ஆளாளுக்கு துவைத்து தொங்கவிட்ட படியேயுள்ளனர். அதிலும் டி.டி.வி.தினகரனெல்லாம் முதல்வருக்கு அட்வைஸ் செய்யும்படி  ஆகிவிட்டதே என்று அ.தி.மு.க.வினர் தலையிலடித்துக் கொள்வதுதான் ஹைலைட்.

  மத்திய தணிக்கை துறையானது ஒவ்வொரு மாநிலத்தின் நிதி நிலை, வருவாய் நிலவரம், ஆகியவற்றை ஒவ்வொரு ஆண்டும் அறிக்கையாக வெளியிடும். எந்தவித அரசியல் பிரஷருக்கும் ஆளாகாமல், மிக சுதந்திரமாக இந்த அமைப்பின் அறிக்கைகள் இருக்கும்.

  இந்த நிலையில் இந்த அமைப்பு கடந்த ஆண்டின் தமிழக நிதி நிலவரம் பற்றிய அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதன்படி மிக கடுமையான கடனில் தமிழக அரசு தவிப்பது பட்டவர்த்தனமாக வெளியாகி உள்ளது. வருவாயை விட மிக அதிகமாக செலவும், அதை சரிகட்ட கடனுமாக போய்க் கொண்டுள்ளது அரசின் நிலை.

  இதை இடித்துக் காட்டி எதிர்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் முதல்வர், துணை முதல்வர் ஆகியோரை பின்னி எடுக்கிறார்கள். சும்மாவே சாமியாடும் டி.டி.வி.தினகரன் இந்த விஷயத்தில் அமைதியாகவா இருப்பார்?” தமிழக அரசின் நிதி செயல்பாடுகள் குறித்த மத்திய தணிக்கை துறை அறிக்கை வெளியாகி உள்ளது. அறிக்கையில், பல்வேறு துறைகளில் திட்டங்களை செயல்படுத்த ஒதுக்கப்பட்ட, 28 ஆயிரத்து 179 கோடி ரூபாய் செலவிடப்படாமல் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  முதல்வர் இ.பி.எஸ். மற்றும் வேலுமணியின் அதிகாரத்தின் கீழ் உள்ள துறைகளில்தான் இப்படி அதிகமாக நிதி செலவிடப்படவில்லை என தெரியவந்துள்ளது. ஜி.எஸ்.டி. வரியில் நம் மாநிலத்துக்கான பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு நிதிகளை, மத்திய அரசிடமிருந்து பெற முடியாமல், தமிழக அரசு நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.

  இந்த நிலையில், திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக செலவு செய்து மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தாமல் இப்படி வீணடிப்பது என்பது குளறுபடிகளின் உச்சம். இவர்களுக்கு ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவும், இதர சுயநல விஷயங்களுக்குமே நேரமில்லாத போது மக்களைக் கவனிப்பது எப்படி?
  இனிமேலாவது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அரசு தவறுகளை திருத்திக் கொள்ளவும், மக்களுக்காக உழைக்கவும் வேண்டும்.” என்று அறிவுரை சொல்லியிருக்கிறார். இதற்குத்தான் தலையிலடித்துக் கொள்கின்றனர் அ.தி.மு.க.வினர்.