இன்று மதியம் 2 மணிக்கு அமிஷ் ஷாவை அவரது வீட்டில் சந்திக்கும் ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள்….

  0
  3
  அமித் ஷா

  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது வீட்டில் இன்று மதியம் 2 மணிக்கு சந்தித்து பேச உள்ளதாக ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

  மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உள்ள ஷாஹீன் பாக் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த டிசம்பர் 15ம் தேதி தொடங்கிய போராட்டம் 2 மாதங்கள் கடந்த பிறகும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் பெண்கள் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர். குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் கொடுத்த பிறகும் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

  ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள்

  இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக விவாதிக்க தயாராக இருப்பதாகவும், குடியுரிமை திருத்த சட்டத்தால் பிரச்சினைக்குரிய எவரும் என்னை வந்து சந்திக்கலாம் எனவும் தெரிவித்து இருந்தார். இதனையடுத்து ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள் அமித் ஷாவை சந்தித்து பேச உள்ளதாக தெரிவித்தனர்.

  ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள்

  ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள் இது குறித்து கூறுகையில், குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க முழு நாட்டையும் வந்து அவரை (அமித் ஷா) சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார். ஆகையால் நாங்கள் அவரை நாளை (இன்று) மதியம் 2 மணிக்கு அவரது வீட்டில் சந்தித்து பேச உள்ளோம். எங்களுக்கு பிரதிநிதி யாரும் கிடையாது. குடியுரிமை திருத்த சட்டத்தில் பிரச்சினைக்குரியவர்கள் அனைவரும் செல்வோம் என தெரிவித்தனர். அதேசமயம் இது போன்ற எந்தவொரு சந்திப்பும் நாளை (இன்று) அமித் ஷாவுடன் திட்டமிடப்படவில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.