இந்த வாரமும் பங்கு வர்த்தகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தும்…. பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு…

  0
  6
  மும்பை பங்குச் சந்தை

  கொரோனா வைரஸ், முன்பேர வர்த்தக கணக்கு முடிப்பு போன்றவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

  இந்திய பங்குச் சந்தைகள் கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை நிலவரப்படி, கோவிட் 19 அல்லது கொரோனா வைரஸால் நம் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 340ஐ தாண்டி விட்டது. மேலும் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது. இதனால் வரும் நாட்களில் கொரோனா வைரஸின் நிலவரம் பங்குச் சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

  கொரோனா வைரஸ்

  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த வாரம் 20 சதவீதம் வீழ்ந்தது. அமெரிக்கா மூலோபாய கையிருப்பை அதிகரிக்க கச்சா எண்ணெய் கையிருப்பை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அமெரிக்கா அது போன்று செய்தால் சர்வதேச சந்தையில் விலை நிலையாக இருக்கும். பங்குச் சந்தைகளில் நிலையற்ற தன்மையை நீக்க பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி, முன்பேர வர்த்தகத்தில் சில நிறுவன பங்குகளுக்கான நிலை வரம்புகளை பாதியாக குறைத்தது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டது.

  கச்சா எண்ணெய்

  இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். அவர்கள் ரூ.49,507 கோடிக்கு பங்குகளை விற்பனை செய்துள்ளனர். அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்தால் பங்கு வர்த்தகம் மேலும் சரிவை  சந்திக்கும். வரும் வியாழக்கிழமை மாதத்தின் கடைசி வியாழன் என்பதால் மார்ச் மாத முன்பேர பங்கு வர்த்தக கணக்கு முடிக்கப்படும் என்பதால் அதுவும் பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

  ரூபாய் வெளிமதிப்பு

  இதுதவிர, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல் நிலவரங்கள் போன்றவையும் இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை முடிவு செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.