இந்த வருஷம் மட்டும் முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு ரூ.1.27 லட்சம் கோடி கூடியிருக்கு….

  0
  1
  முகேஷ் அம்பானி

  முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இந்த ஆண்டில் மட்டும் சுமார் ரூ.1.27 லட்சம் கோடி உயர்ந்துள்ளது. இதே காலத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை சுமார் 40 சதவீதம் உயர்ந்ததே இதற்கு முக்கிய காரணம்.

  இந்தியாவின் மெகா கோடீஸ்வரர் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி. பெட்ரோலிய வர்த்தகம், தொலைத்தொடர்பு துறை மற்றும் சில்லரை வர்த்தகம் என பல்வேறு வர்த்தக துறைகளில் முகேஷ் அம்பானி கொடி கட்டி பறக்கிறார். அவன் தொட்டது எல்லாம் விளங்குது என ஊர் பக்கத்தில் சொல்வார்கள் அதற்கு நல்ல உதாரணம் முகேஷ் அம்பானி.  களம் இறங்கிய எந்த தொழிலும் அவர் சோடை போனது இல்லை.

  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

  ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு மட்டும் இந்த ஆண்டில் சுமார் ரூ.1.27 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. இதே காலத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளின் விலை 40 சதவீதம் உயர்ந்ததை இதற்கு காரணம் என  புளும்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த 23ம் தேதி நிலவரப்படி முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு ரூ.4.33 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

  ஜெப் பியோஸ், ஜாக் மா

  அதேசமயம் இந்த ஆண்டில் அலிபாபா குழுமத்தின் நிறுவனர் ஜாக் மாவின் சொத்து மதிப்பு ரூ.80 ஆயிரம் கோடி அளவுக்குதான் உயர்ந்துள்ளது. ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானின் தலைவர் ஜெப் பியோஸின் சொத்து மதிப்பு இந்த ஆண்டு ரூ.93 ஆயிரம் கோடி குறைந்துள்ளது. முகேஷ் அம்பானி விரைவில் ஆன்லைன் வர்த்தகத்திலும் (இ காமர்ஸ்) களம் இறங்க உள்ளார். இது அமேசான் நிறுவனத்துக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.