இந்தியா உள்பட 34 நாடுகள்தான் ஒழுங்கா ஆண்டு தொகை கொடுத்து இருக்காங்க! அடுத்த மாதம் சம்பளம் போடவே வழியில்லை புலம்பும் ஐ.நா.

  0
  1
  ஐக்கிய நாடுகள்

  இந்தியா உள்பட 34 நாடுகள் மட்டுமே வழக்கமான ஆண்டு நிலுவை தொகையை நிர்ணயித்த காலத்துக்குள் செலுத்தியுள்ளன. அடுத்த மாதம் பணியாளர்களுக்கு சம்பளம் போட வழியில்லாத அளவுக்கு நிதி நிலைமை மோசமாக உள்ளதாக ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) சபை தெரிவித்துள்ளது.

  ஐக்கிய நாடுகள் சபையில் மொத்தம் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஒவ்வொரு நாடும் பட்ஜெட் போட்டு செயல்படுவது போல் ஐ.நா.வும் பட்ஜெட் போட்டுதான் இயங்கி வருகிறது. ஐ.நா. 2018-19ம் ஆண்டுக்கு 540 கோடி டாலர் அளவுக்கு பட்ஜெட்டை செயல்படுத்தி வருகிறது. இதில் அமைதி நடவடிக்கைக்கான பணம் சேராது. உறுப்பு நாடுகள் வழங்கும் தொகையை வைத்துதான் ஐ.நா. பணியாளர்களுக்கு சம்பளம் உள்பட எல்லா செலவுகளையும் செய்கிறது.

  ஐ.நா. பட்ஜெட் பங்களிப்பு

  இந்நிலையில், 2019 அக்டோபர் நிலவரப்படி,  மொத்தமுள்ள 193 உறுப்பு நாடுகளில் இதுவரை 129 நாடுகள் மட்டுமே ஆண்டு நிலுவை தொகையை  செலுத்தியுள்ளதாகவும், அதிலும் இந்தியா உள்பட 34 நாடுகள் மட்டுமே நிர்ணியக்கப்பட்ட காலத்துக்குள் செலுத்தி உள்ளதாகவும் ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது. இதில் இந்தியாவின் பங்களிப்பு மட்டும் 2.32 கோடி டாலராகும். தற்போது ஐ.நா.வின் நிதி நிலவரம் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான நிலையில் உள்ளது.

  அண்டோனியோ கட்டர்ஸ்

  இது தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டோனியோ கட்டர்ஸ் சார்பாக அவரது செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஐ.நா. கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது. இந்த மாத இறுதிக்குள் கையிருப்பும் காலியாகி விடும் சூழ்நிலை உள்ளது மற்றும் அடுத்த மாதம் பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் வணிகர்களுக்கு பணம் கொடுக்க முடியாமல் போகலாம். அதனால் இதுவரை நிலுவை தொகை செலுத்தாத நாடுகள் விரைவாகவும், முழுமையாகவும் செலுத்தும்படி உறுப்பு நாடுகளுக்கு கடிதம் எழுதி இருப்பதாக கட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.