இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான 20 ஓவர் போட்டி நாளை தொடக்கம்!!

  0
  1
  பயிற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய வீரர்கள்

  ஆஸ்திரேலிய அணியின், இந்திய சுற்றுப்பயணம் விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ள 20 ஒவர் போட்டியுடன் நாளை தொடங்கவுள்ளது

  -குமரன் குமணன்

  விசாகப்பட்டினம்: ஆஸ்திரேலிய அணியின், இந்திய சுற்றுப்பயணம் விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ள 20 ஒவர் போட்டியுடன் நாளை தொடங்கவுள்ளது.

  ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு 20 ஓவர் போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. முதற்கட்டமாக இருபது ஓவர் போட்டிகள் நாளை இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது.

  அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு நீண்டதொரு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டது இந்திய அணி. அதில் 3 போட்டிகள் கொண்ட இருபது ஒவர் தொடர் 1-1 என சமனில் முடிய, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களை தன்வசப்படுத்தியது இந்திய அணி. அதன் பிறகு நியூசிலாந்து சென்ற இந்திய அணி, ஒருநாள் தொடரை 4-1 என வென்றாலும், இருபது ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது .

  இந்த ஆண்டு “உலக கோப்பை ஆண்டு” என்பதால், ஒருநாள் போட்டிகள் தான் அதிக கவனத்துடன் அனைத்து தரப்பினராலும் பார்க்கப்படும் என்றாலும், இந்திய அணிக்கு கோலி, பும்ரா ஆகியோர் திரும்பியிருப்பதால் பொழுது போக்குக்கு பஞ்சம் இருக்காது. மேலும் இருபது ஒவர் போட்டிகளின் சில தருணங்கள், ஒருநாள் போட்டிகளின் போதும் அனுபவ ரீதியாக கை கொடுக்க வாய்ப்புண்டு என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

  இந்திய அணியை பொறுத்தவரை, தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும், ஒருநாள் தொடருக்கான அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இருபது ஓவர் தொடரிலும் கூட,லோகேஷ் ராகுலின் மறு வருகை கார்த்திக் விஷயத்தில் இடையூறு செய்கிறது. பந்து வீச்சாளர்களில் பெரிய மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லாத நிலையில், கவுல் ,மார்க்கண்டே ஆகியோர் களமிறங்குவது கடினம்.

  ஆஸ்திரேலிய வீரர்களில் பலர், அண்மையில் நடந்து முடிந்த பிக் பேஷ் தொடரில் பங்கேற்றவர்கள் என்பதால் தங்கள் அதிரடியை தொடர அவர்களும் முயல்வார்கள். கடந்த 2016-ஆம் ஆண்டு தோனி தலைமையில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதன்பின் இப்போது கோலி தலைமையில் உள்நாட்டில் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றுவார்களா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

  இந்திய அணி விவரம்:

  விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ஷிகர் தவண், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், எம்.எஸ்.தோனி, குர்னல் பாண்டியா, விஜய் சங்கர், யஜுவேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல், மயங்க் மார்கண்டே.

  ஆஸ்திரேலிய அணி விவரம்:

  ஆரோன் பிஞ்ச்(கேப்டன்), டி ஆர்கே ஷார்ட், பாட் கம்மின்ஸ், அலெக்ஸ் காரே, ஜேஸன் பெஹரன்டார்ப், நாதன் கோல்டர் நீல், பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், உஸ்மான் கவாஜா, நாதன் லயன், கிளென் மேக்ஸ்வெல், ஜே ரிச்சார்ட்ஸன், கானே ரிச்சார்ட்ஸன், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆஸ்டன் டர்னர், ஆடம் ஜம்ப்பா