இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதமாக குறைந்திருக்கும்….. அடித்து சொல்லும் பன்னாட்டு நிதியம்….

  0
  1
  இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி

  2019ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதமாக குறைந்திருக்கும் என பன்னாட்டு நிதியம் தற்போது கணித்துள்ளது. கடந்த அக்டோபர் மதிப்பீட்டின்போது, இந்தியாவின் பொருளாதாரத்தில் 6 சதவீதம் வளர்ச்சி ஏற்படும் என கணித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

  நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த சில காலாண்டுகளாகவே சரிந்து வருகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி 5 சதவீதமாகச் சரிந்த நிலையில், 2-வது காலாண்டில் 4.5 சதவீதமாகக் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது. இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து அனைத்து தரப்பினருக்கும் கவலை ஏற்பட்டது.

  பன்னாட்டு நிதியம்

  இந்நிலையில் பன்னாட்டு நிதியம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டை தற்போது குறைத்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் பன்னாட்டு நிதியம் வெளியிட்டு மதிப்பீட்டில், 2019ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரத்தில் 6.1 சதவீதம் வளர்ச்ச ஏற்படும் என்றும், 2020ல் 7 சதவீதமும், 2021ல் 7.4 சதவீதமும் வளர்ச்சி ஏற்படும் என கணித்து இருந்தது. ஆனால் தற்போதைய மதிப்பீட்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை குறைத்துள்ளது. அதாவது 2019ல் 4.8 சதவீதம் அளவுக்கே பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படும். 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் முறையே 5.8 சதவீதம் மற்றும் 6.5 சதவீதம் அளவுக்கே பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படும் என முன்னறிவிப்பு செய்துள்ளது.

  பொருளாதாரம்

  உள்நாட்டில் தேவை குறைந்தது, வங்கியில்லா நிதிசேவை துறையில் நிலவும் நெருக்கடி மற்றும் கடன் வளர்ச்சி குறைந்தது போன்றவை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைவுக்கு முக்கிய காரணமாக பன்னாட்டு நிதியம் கூறுகிறது. மேலும் இந்தியாவின் பொருளாதார மந்தநிலைதான் உலக மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை குறைத்து மதிப்பீடுவதற்கு முக்கிய காரணம் எனவும் பன்னாட்டு நிதியம் குற்றச்சாட்டியுள்ளது.