இண்டிகோ நிறுவனர்களின் அதிகார மோதல்- விளக்கம் கேட்கும் மத்திய அரசு!

  0
  3
  இண்டிகோ

  இண்டிகோ நிறுவனத்தின் நிறுவனர்களின் ஒருவரான ராகேஷ் கங்வாலின் குற்றஞ்சாட்டு குறித்து மத்திய நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகத்திடம் விளக்கம் அளிக்கப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

  இந்திய உள்நாட்டு விமான போக்குவரத்து சேவையில் முன்னணியில் இருக்கும் இண்டிகோ நிறுவனம் தற்போது அதன் நிறுவனர்களின் அதிகார மோதலால் சிக்கி தவித்து வருகிறது. 2006ம் ஆண்டில் விமான போக்குவரத்து சேவையில் காலடி எடுத்து வைத்த இண்டிகோ 2012ல் முதலிடத்தை பிடித்தது. 

  ராகுல் பாட்டியா

  2015ல் இண்டிகோ நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. இண்டிகோ நிறுவனத்தின் நிறுவனர்கள் ராகுல் பாட்டியா மற்றும் ராகேஷ் கங்வால் ஆகியோரிடம் முறையே 38.26 மற்றும் 36.69 சதவீத பங்குகள் உள்ளன. சமீபகாலமாக இண்டிகோ நிறுவனத்தின் நிறுவனர்களுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.அதன் தொடர்ச்சியாக நிர்வாகத்தை யார் கைப்பற்றுவது என்று மோதல் எழுந்தது. தற்போது அது வெளிப்படையாக வெளியே தெரிந்து விட்டது.

  இந்நிலையில், நிறுவன விதிமுறைகளை ராகுல் பாட்டியாக மீறி விட்டதாக ராகேஷ் கங்வால் வெளிப்படையாக குற்றஞ்சாட்டினார். மேலும், குற்றஞ்சாட்டு நகல்களை நிர்மலா சீதாராமன், மத்திய நிறுவனங்கள் விவகாரத் துறை, செபி அமைப்புக்கு ராகேஷ் கங்வால் அனுப்பினார். இதனால் இண்டிகோ நிறுவனத்தின் நிர்வாகத்தின் மீது சந்தேகம் எழுந்தது. 

  ராகேஷ் கங்வால்

  இதனையடுத்து மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது. ராகேஷ் கங்வால் குற்றஞ்சாட்டு தொடர்பாக சில விளக்கங்களை  அளிக்கும்படி இன்டர்குளோபல் அவிட்டேஷன் நிறுவனத்துக்கு நிறுவனங்கள் பதிவாளர், டெல்லி தேசிய தலைநகர் பகுதி மற்றும் அரியானா ஆகியவை உத்தரவிட்டுள்ளது. 
  இது குறித்து மத்திய நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சகத்திடம் விளக்கம் அளிக்கப்படும் என பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் இண்டிகோ நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.