ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் பேசியதால் பிரணாப் முகர்ஜியை புறக்கணித்த சோனியா, ராகுல் காந்தி….

  0
  1
  பிரணாப் முகர்ஜி

  முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பாரத ரத்னா விருது பெறும் விழாவில் சோனியாவும், ராகுல் காந்தியும் கலந்து கொள்ளாதது பெரும் புகைச்சலை கிளப்பியுள்ளது.

  குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் பாரதிய ஜன சங்கத்தின் தலைவர் மறைந்த நானாஜி தேஷ்முக் மற்றும் மறைந்த பாடகர் பூபேன் ஹஸாரிகா  ஆகியோருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பாரத ரத்னா விருதை வழங்கி கவுரவித்தார்.

  சோனியா, ராகுல்

  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய பிரணாப் முகர்ஜி பாரத ரத்னா விருது பெரும் விழாவில் அந்த கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களான சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் கலந்து கொள்ளவில்லை. இவ்வளவுக்கும், இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு குடியரசு தலைவர் மாளிகையிலிருந்து அவர்கள் இருவருக்கும் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர்கள் கலந்து கொள்ளவில்லை.

  கடந்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தங்களது கூட்டத்தில் பேசவருமாறு பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுத்தது. இதனை அறிந்த காங்கிரஸ் தலைவர்கள் அந்த கூட்டத்தில் பங்கேற்க கூடாது என பிரணாப் முகர்ஜியை வலியுறுத்தினர். ஆனால் அதனை எல்லாம் கண்டு கொள்ளாமல் பிரணாப் முகர்ஜி அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். இது காங்கிரஸ் தலைவர்களுக்கு குறிப்பாக சோனியா, ராகுல் காந்திக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது.

  ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் பிரணாப் முகர்ஜி

  அந்த சம்பவத்தை நினைவில் வைத்து கொண்டுதான் நேற்று பிரணாப் முகர்ஜி பாரத ரத்னா விருது பெறும் விழாவை சோனியாகாந்தியும், ராகுல் காந்தியும் புறக்கணித்ததாக தெரிகிறது என ஒரு தகவல் சுற்றி வருகிறது. மேலும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் அந்த விழா பக்கமே வரவில்லை. அதேசமயம், காங்கிரசை சேர்ந்த சசி தரூர், ஆனந்த் சர்மா, அகமது படேல் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.